Sunday, July 7, 2019

மீளாத்துயர் மே18

வாழ்விடம் நாங்கள் வாழவே கேட்டோம்
வாழ்விடம் எங்கள் சாவிடம் என்றானது.
#மே18.

குருதிக்குள் இருந்த எம் உறுதியை எடுத்து-பெரும்
புழுதிக்கு இரையாக்கி அறுதியாய் அறுத்தது தேசம்.
#மே18.

போர் அவலம் எமக்குமட்டும் பேரவலமானது.
ஊர் முழுக்க போர் பிடிக்க ஓடி ஓடி உடைந்துபோனோம்.
#மே18.

பயிர்செய்து அழகுபார்த்த மண்ணில் -எம்
உயிர்கொய்து அழகுபார்த்தது ஐய்யோ.
#மே18.

தேவனும் இரங்கவில்லை ஒரு தேவதையும் இறங்கவில்லை.
நாதனும் வரவில்லை எந்த நாதியும் அங்கு நமக்கில்லை.
#மே18.

தேசமும் கொண்ட தாகமும் மெல்ல கரைந்தது.
சோகமும் பல தேகமும் கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது.
#மே18.

நீதியை கேட்டு நிதம் அநாதைகள் ஆனோம்
ஆதியாம் எம் இனம் இருந்தும் அனாதிகளானோம்.
#மே18.

பிஞ்சுடல்,பெண்சதை குண்டதன் நஞ்சினை பெற்றது.
எஞ்சிய உயிர்களும் இதன்வழி பெரும்வலி பரிசாய் பெற்றது.
#மே18.

தீராத சோகம் எங்கள் முகவரியானது
ஆறாத ரணங்கள் அடைக்கலம் கேட்டது.
#மே18.

உயிர்வற்றிப்போன உடல்களை கடந்து
உதிரத்தை முழுதும் மண்ணில் விதைத்து
உறவாடி திரிந்த ஊரையும் விட்டுவிட்டு
சொந்தநாட்டிலே அகதிகளாய் ஆனோம்.
#மே18.

பிணந்திண்ணும் விலங்கைவிட இனந்திண்ணும் விலங்குகள் கோடி
உலகத்தின் கண்முன்னே எமை உருக்குலைத்தது கூடி.
#மே18.

நந்திக்கடல் முழுதும் சிந்திக்கிடந்த ரத்தம் சொல்லும்.
தந்திரம்,துரோகம்,சூழ்ச்சி இவை தந்திட்ட பாடம் சொல்லும்.
#மே18.

செந்தணல் மீதினில் கந்தகக்காற்றினில்
செந்நிறமாகின பொன்நிற மேனிகள்.
இப்புவிமீதினில் இன்னொரு மே தனில்
அப்பாவி மாந்தரெல்லாம் மீண்டிட மாட்டாரோ..
#மே18.

தீரா சோகங்கள் இதுபோல் இன்னும் திசையெங்கும் நீளும்.
தியாகங்கள் வழி எங்கள் தாயகம் திரும்பவும் மீளும்.
#மே18.
-பிரகவி.(பிரகலாதன்)

Sunday, April 14, 2019

நான்.

பாறையில் பாய்கையில் என் பெயர் அருவி.
ஓடையில் ஓடுகையில் என் பெயர்
நதி.
பள்ளத்தில் நிற்கிறேன் என் பெயர்
குளம்.
பருகவும் எனைத்தந்தால் என் பெயர்
ஜலம்.
பேரழிவை தருகையில் என் பெயர் பேரலை.
பேரழகாய் தோன்றுகையில் என் பெயர்
நீர்வீழ்ச்சி.
தூறலாகி பொழிகின்றேன் என் பெயர் மழை.
தரைவரை நுரைதருவேன் என்பெயர் அலை.
வாடையும் வரும் கோடையும் எனை வானுக்கனுப்பி மகிழ்ந்திருக்கும்-பின்
வாடும் பயிரெலாம் மழையென் வருகை கண்டு நெகிழ்ந்திருக்கும்.
காலமும் கொண்ட கோலமும் மாறுவதைப்போல்தானிருக்கும்.
ஞாலமும் அதன் ஆழமும் தன்னை
புதுப்பித்தபடியிங்கே பூத்திருக்கும்.
நானும் அதுபோல்தான்.
நாளும் ஓடுவேன் நல்லதை பாடுவேன்.
வாழும் பொழுதுகளை வரமாக தேடுவேன்.
தேடல்களில் தினம் நான் எனைத்தொலைப்பேன்
விடியல்களில் மீண்டும் எனைக்கண்டு பிடிப்பேன்.
வாடும்பொழுதுகளில் என் பிரியங்களில் திளைப்பேன்-பிறர்
வாடும் பொழுதுகளில் என் பிரியங்களை
கொடுப்பேன்.
தீரா இரவில் விரியும் கானம் போலே
தேயா நிலவொளியில் தெரியும் வானம்போலே -என்றும்
ஓயாது உழைப்பேன் ஒன்றுபட்டு நிலைப்பேன்.

-பிரகவி.

சக்தி தரும் பராசக்தி

சக்தி தரும் தேவிகளின் திருவிழா இது.
பக்தியுடன் போற்றி இங்கே பணிந்திடுவோம் வாரீர்.
இச்சா சக்தி, கிரியா சக்தி ஞானா சக்தி
இவை மூன்றும் கொண்டவள் அன்னை பராசக்தி.
எமக்காக அவளிங்கு வடிவெடுத்தாள் மூன்றாய்.
எம்வாழ்வும் வளமாகும் அவளருளில் நன்றாய்.

மகிஷனை வதம்செய்தாள் எங்கள் பெரும்தேவி.
மண்ணோடு மாண்டிட்டான் அந்த பெரும்பாவி.
அந்நாளை திருநாளாய் ஆக்கியிங்கே நாம்
ஆராதனை செய்வோம் அன்னையவள் நாமம்.

வீரமும் தைரியமும் தருபவள் துர்க்கை
செல்வமும் செழிப்பும் தருபவள் லக்ஷ்மி
கல்வியும் கலைகளும் தருபவள் சரஸ்வதி
மூவரை போற்றியே மும்மூன்று நாட்களாய்
தேவியர் புகழ்பாடும் திருநாளே நவராத்திரி.

அழியாச்செல்வமும் ஆயகலைகளும்
துணிவுடன் வீரமும் தூய கல்வியும்
பொழியச்செய்யும் எம்பெருந்தேவியர்.
இவர்களை போற்றி இறைவராய் ஏற்றி
அவனியில் நாமும் இன்புற்று வாழ்வோமே.
-பிரகவி.


லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்.

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
கொஞ்சமே என்றாலும் கொடுத்துண்.
நஞ்சினை தலைக்கும் மண்தரைக்கும் சேர்க்காதே
வெஞ்சினம் அகற்று வேறோர் உலகம் நிறுவு.
கொஞ்சமாய் பேசு கூடியிருந்து பயன்பெறு.
நெஞ்சம் நிறைந்தொரு நேசம் செய்
நீதியை கொண்டொரு தேசம் செய்
வியர்வை வரும்வரை வேலை செய்
வியாதி தீர்ந்திடும் ஒரு நாளைச்செய்.
பஞ்சம் அகற்ற பயிர்செய்
பஞ்சினும் மென்மைபோல் உயிர்செய்.
நெஞ்சம் துணிந்து நின்றிட பழகு
நீயாய் நடந்திட பாதை நிர்மாணி.
எஞ்சும் எண்ணிக்கை குறைவெனினும்
எடுத்த இலக்கை அடைந்தே ஓய்வெடு.
மிஞ்சும்படி உனக்கிங்கு எதுவுமில்லை-பலர்
விஞ்சும்படி உந்தன் வினையாற்று- விதிமாற்று.
-பிரகவி.

சின்னஞ்சிட்டுக்கள்.

மண்ணை முட்டா கால்கள் கொண்ட
விண்ணை முட்டும் கைகள் கொண்ட
கண்ணை முட்டும் கனவுகள் கொண்ட
சின்னஞ் சிறிய சிறுவர் நாங்கள்.
உடலால், உளத்தால், உணர்வால் நாங்கள்
உதை, வதை, சிதை தினம் படுகின்றோம் உலகில்  விதைகள் எமக்கிங்கு விசம் வைக்கிறார்கள்
இதை தட்டிக்கேட்க நீங்கள் எமக்கு துணை வாருங்கள். சிறுவர் தினத்தில் மட்டும் எமை சிறப்பிக்க வேண்டாம்
சிறுவர் போல் நடத்துங்கள் உருப்பெருப்பிக்க வேண்டாம்
 நமக்கான பாதைக்காய் மெல்ல நகர்ந்து வழி விடுங்கள்
நாளைக்கு பாருங்கள் நாம்தான் நாட்டின் தூண்கள்.
உலக சிறுவர் தின நல்வாழ்த்துக்கள் அனைத்து சிறுவர்களிற்கும் உரித்தாகட்டும்.
-பிரகவி.

சக்தியின் பெருவிழா.

தெள்ளுதமிழெடுத்து தேனமுது தனைக்குழைத்து
அள்ளியிறைக்கவென்றே வந்திருக்கும் அறிஞர் முன்னே -ஒரு
பிள்ளைக்கவி நானும் பிழைகளும் சிலகொண்டு
மெல்ல மேடையேறி கவிபாட இங்கே வந்துள்ளேன்-முன்னுள்ளோர்
கல்லைக்கொண்டெறிந்திடாது காத்திடுவாய் கலைவாணி.

தேவிகளின் திருநாமம் தனைப்போற்றும் திருநாளில்
துறைசார்ந்தோர் ,பெரியோர்கள்,பிள்ளைகள் உங்கள் முன்னே
பறைசாற்ற பைந்தமிழில் பாடுகின்றேன் கேளீர்.
குறையேதும் உண்டென்றால் பெருமனதால் மன்னிப்பீர்.

சக்தி தரும் தேவிகளின் திருவிழா இது
பக்தியுடன் போற்றியிங்கே வணங்கிடுவோம் வாரீர்.
இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞானாசக்தி
இவை மூன்றும் கொண்டவள் அன்னை பராசக்தி.
எமக்காக அவளிங்கு வடிவெடுத்தாள் மூன்றாய்
எம்வாழ்வும் வளமாகும் அவளருளில் நன்றாய்.

அழியாச்செல்வமதை பொழியச்செய்பவள் லக்ஷ்மி.
பொழியும் செல்வமதை மேலும் பெருகச்செய்பவளும் லக்ஷ்மி.
துளியும் குறைவையாள் எம் வழிகள் சீர்செய்வாள்.
பழியிலா செல்வம் சேர பத்மா அவள் பாதம் தொழுவோம்.

நாற்திசை உள்ளோரும் நலம்பெறவேண்டியே
தேவரும் அசுரரும் தொடங்கிய திருப்பணியில்
பாற்கடலில் இருந்தெங்கள் திருமகள் தோன்றினாள்
பாமரனும் வளம்பெறவே அவள் தேவியாய் உருமாறினாள்.

பொருள் இல்லார்க்கு இப்பூவுலகில்லை இது வள்ளுவன் வாக்கு- என்
அருள் உள்ளோர்க்கு அழியாச்செல்வமுண்டு இது அலைமகள் வாக்கு.
இல்லானை இல்லாளும் வேண்டாள் இது ஔவை அன்று சொன்னது.
இல்லானை எல்லாம் உள்ளவனாக்குவேன் இது தேவி என்றும் சொல்வது.

யுகங்களிற்கேற்ப அவள் எடுக்கும் வடிவங்கள் எட்டு- செல்வ
சுகங்களிற்கேற்ப அவளருள் கிட்டும் தொன்றுதொட்டு.
நிலையான செல்வங்கள் அவளிங்கு தருகையில் வடிவங்கள் பதினாறு.
விலையேதுமில்லா அவள் செல்வங்களால் எம் மனம் ஆறும்.

பிருகுமுனிவரின் மகளாய் உருவம்கொள்கையில் அவள் ஆதிலக்ஷ்மி.
பெருகும் பொன் பணம் தருகையிலே அவள் தனலக்ஷ்மி.
பயிர்கள் செழிக்கச்செய்கையிலே அவள் கொள்ளும் வடிவம் தானியலக்ஷ்மி.
உயிர்கொண்ட கால்நடை வளம்பெருக்க அவள் கொள்ளும் வடிவம் கஜலக்ஷ்மி.
குழந்தை செல்வம் குறைவின்றி கிடைக்க  எடுக்கும் வடிவம் சந்தான லக்ஷ்மி.
குன்றாவீரம் இக்குவளயம் கண்டிட அவள் எடுக்கும் வடிவம் வீரலக்ஷ்மி.
வாழ்வின் காரியம் யாவும் வெல்ல அவள் விஜயலக்ஷ்மி என்றாவாள்.
வாழ்வுமுழுதும் வளம்பெறும் கல்வி தந்து அவள் விஜயலக்ஷ்மியும் ஆவாள்.
எட்டுத்திருவுருவங்கள் எங்கள் அலைமகள் எடுப்பாள்.
எல்லோர்க்கும் எல்லாமும் என்றே எங்கள் திருமகள் கொடுப்பாள்.

கற்ற கல்விக்கோர் தொழிலும் கிட்டும்-அன்னை
உற்ற பொழுதுகளில் உடனிருந்து நடத்தி வைப்பாள்.
கற்கும் கல்விக்கும் பெரும் சித்தி கிட்டும் -லக்ஷ்மி
கடாட்சம் கிடைத்துவிட்டால் பெரும் முக்தி கிட்டும்.

விஷ்ணுவின் வலதுதோள் இவள் வதிவிடம் ஆகிடும்.
துஷ்டரும் நெருங்காமல் துணைசெய்வாள் திருமகளே.
தாம்பூலத்தில் இவள் வாசமிருக்கும் தாமரையிலும் இவள் வாசம் இருக்கும்
தாங்கும் அடியவர் யாவரின்மேலும் இவள் பாசமிருக்கும்.

அச்சடித்த காகிதமாம் பணம் மட்டும் செல்வமல்ல
அச்சழகும் துச்சமாகும் எம் அழகான மொழிகொண்டு
அன்பு சிறுவர் நீங்கள் அன்றாடம் பள்ளிவந்து -பெறும்
அறிவும் கலைகளுமே அழியாச்செல்வமென்று
அலைமகளே சொல்கின்றாள் அகமகிழ்வாய் ஏற்றிடுவீர்.

அன்பை தருவாள் அன்பை உங்களிடமிருந்தும் அன்னை பெறுவாள்.
அழகை தருவாள் அறிவெனும் நிலையழகை அவளிங்கு தருவாள்.
என்றும் அவள்பாதம் வணங்கிடில் எமக்கிங்கு
துன்பம் நெருங்காது துரத்தும் வியாதியும் இருக்காது.

சிறுவர் நாம் சேர்ந்து செந்தமிழில் பாட்டிசைத்து
உருவம் எட்டாய் நிற்கும் உத்தமியாம் லட்சுமியை
திருமாலின் நாயகியை ஒருநாளும் மறவாது
தினந்தோறும் தொழுதிங்கே தீபங்கள் ஏற்றுவோம் திருநாமம் போற்றுவோம்.

மங்கள லட்சுமியே போற்றி
மஹா லட்சுமியே போற்றி போற்றி
திருமகளே போற்றி - எங்கள்
தெய்வத்தாயே தினம் போற்றி போற்றி.

-பிரகவி.




நாய்ப்பிழைப்பு


வாய்க்கவே கூடாது நமக்கு
வரும் பிறவிகளில் அவர்கள் பிறப்பு.
வாய்ப்பொன்றை கேட்க வாலாட்டி
வசதிவந்த பின்னும் கைகள் நீட்டி
வழிமறக்கும் மனிதப்பிழைப்பு மட்டும்
வாய்க்கவே கூடாது நமக்கு.
செயல்களெல்லாம் எமை விஞ்சும்படி சிறப்பாய் அவர்கள் செய்வர்.
காலை நக்குதல்,வாலாட்டுதல்
கண்டபடி குரைத்தல்,கடித்தல் என
எல்லாவற்றையும் அவர்கள் செய்வர்-பின்
நாய்க்குணம் என்று நம் பெயர்தனை அவர்கள் பாவிப்பர்.
எல்லாவற்றையும் எங்களிடமிருந்து பெற்றவர்கள்
ஒன்றைமட்டும் இன்னும் கொண்டுபோகவில்லை.
நன்றிமறவா தன்மை தான் உண்மையில் நாய்கள் நம் குணம்.
அன்றே மறந்திடும் அபூர்வமே அவர்கள் குணம்.
அந்த ஒன்றில் நாம் அவர்களைக்காட்டிலும் என்றும் உயர்வே
இந்த ஒன்றுபோதும் எந்தன் நண்பா.
சொந்த இடமின்றியும் சொத்துசுகம் இன்றியும்
வங்குரோத்து அரசியல் வானை பிளக்கும் அறிவியல்
டெங்கு நோயின் தீவிரம் தங்கவிலையில் சேதாரம்
இந்த வகையில் துன்பங்கள்
எந்த நோவும் இன்றியே
கொஞ்சம் ஓய்வும் மிஞ்சும் உழைப்பும் கொண்டு நாமும் பயணிப்போம்.
திரும்பவும் ஒரு தேர்தலில் அவர்கள்
தங்களில் பெரியவர் யார் என தேடட்டும்.
பாவம் கடைசிவரைக்கும் அவர்கள் தங்களில் "மனிதரை" தேடுவதேயில்லை.
-பிரகவி.

புத்தகம் எடு புதுயுகம் தொடு.

& புத்தகம் எடு புதுயுகம் தொடு &

நித்தமும் ஒரு புத்தகம் வாசி இந்த
நித்திலம் சிறக்கும் நீ அதை யோசி.
சத்தியமாய் எல்லாம் சாத்தியமாகும்
ஒரு புத்தகம் போதும் உலகமே மாறும்.

தெருவிலே படித்தாலும் தலைவனாய் ஆகலாம்-நூல்
உருவிலே உந்தன் ஆளுமை வளர்க்கலாம்.
கருவிலே குழந்தையை சுமந்திடும் தாய்கூட
உருவாகும் குழந்தையை உலகாள வைக்கலாம்.

பாதைக்கு ஒளியூட்ட விளக்கு வேண்டும்-பாரில்
மாந்தர்க்கு அறிவூட்ட நூல்கள் வேண்டும்.
நீதியாய் நேர்மையாய் நெறிமுறை வாழ்விலே
சாதிக்க வேண்டும் நல்நண்பன் எனும் புத்தகங்கள்.

நாளிதழ் படிக்கையில் அந்த நாளில் ஒரு புத்துணர்ச்சி
நாளும் ஏதும் படிக்கையில் வாழும் வாழ்விலும் அதே மலர்ச்சி.
தேடலுள்ள வாழ்வில்தான் தித்திப்பு இருக்கும்
தேடித்தேடி வாசிப்போம் வாழ்வும் புத்துயிர்ப்பாய் இருக்கும்.

நூல்களை வாசிப்போம் நால்வருக்கு அதை பகிர்வோம்.
நூலகங்கள் எல்லாமே நூல்களின் ஆலயம் ஆக்குவோம்.
சாலைகள் தோறும் வாசிகசாலைகள் அமைப்போம்
சரித்திரம் படைத்திடும் புத்தகப்புரட்சி செய்வோம்.

-பிரகவி.




.

மண்ணுலகின் மைந்தன்.

மார்கழியில் மரியின் மைந்தன்
மண்ணுலகில் பிறந்தார்.
தேவதூதன் சொன்னது போல்
தேவமைந்தன் உதித்தார்.
புல்லணையில் பாலகனாய்
புவியின் நேசன் பிறந்தார்.
அல்லலுறும் மக்கள் துன்பம்
அகற்றிடவே பிறந்தார்.
எல்லையில்லா நேசம் தனை
எல்லோருக்கும் தந்தார்.
நல்ல நல்ல பிள்ளைகளாய் நாம்
வளர வழியும் சொன்னார்.
அன்பு கொண்டு அனைவரையும்
அன்பு செய்ய சொன்னார்.
மண்ணில் நல்ல வண்ணம் மக்கள் வாழ
விண்ணில் வல்ல தேவன் மகிமை சூழ
என்னில் உன்னில் உள்ள அன்பு கூட
எங்கள் இயேசு பாலன் இங்கு பிறந்தார்.
தந்தையோடு மைந்தன் இவர் சேர்ந்ததினாலே
விந்தைமிக்க ஓர் இனமாய் நாமும் உயர்ந்தோமே.
இரட்சகராம் இயேசுவையே
எந்த நாளும் துதிப்போம்.
மண்ணில் உதித்த மன்னவன் அவர்
சொன்ன வழியில் நடப்போம்.
-பிரகவி.

ஏமாற்றுவித்தைக்காரர்.

ஒற்றையாட்சி என்பார் உண்மைதான் ஒற்றையில் (தாள்) மட்டுமே அவர் பிரேரணை நிறைவேற்றம்.
ஓராண்டுக்குள் தீர்வென்பார் உண்மைதான் அடுத்த ஆண்டு அவர்கள் பிள்ளை வெளிநாடு சென்றுவிடும்.
அபிவிருத்திக்கான நிதியில் பாரபட்சமென்பார் உண்மைதான்
வந்த நிதிகளை பாராமலே திருப்பி அனுப்பிடுவார்.
தன் நாவினைகூட அழுத்தி உச்சரிக்க முடியாதோர் ஐ.நா விற்கு  இம்முறை அழுத்தம் கொடுத்தோம் என்பார்.
கை,கால் முஷ்டிகளில்கூட சிறுவலுவும் இல்லாத தலைமையின் கீழ் சமஷ்டிதான் ஒரே தீர்வென்பார்.
போரின் பின்னான இயல்பு வாழ்வு இன்றளவிலும் வாய்க்கவில்லை என்பதே இவர்களிற்கான நல்ல வாய்ப்பு.
புகலிடம் கோரியவர்களில் பழமை
வாதிகளிடமும் தொடருது இவர்கள் ஏய்ப்பு.
விடுவிக்கப்படாதிருக்கும் கைதிகள்,காணிகள் இருக்குமட்டும் இவர்களிற்கும் எதிர்காலம் இருக்கும்.
வேலிதாண்டும் வேளைகளில் இவைகளை பார்த்து சத்தம்போடவும் சுத்தம் செய்யவும் இருந்த சேவலையும் அதன் சேனையையும் சரித்தாயிற்று.
அடைகாக்கப்படும் முட்டைகளில் ஒன்று அகிலம் காக்கவென வரும்வரைக்கும்
காக்கா தன்னை குயில் என்றும்
கழுதை தன்னை குதிரையென்றும் சொல்லட்டும்.
நம்பித்தொலைக்காமலிருப்பதே நம் தலைமுறைக்கு நாம் செய்யும் பெரிய புண்ணியம்.
-பிரகவி.

 

என் கிராமத்து வாழ்க்கை

அதிகாலை சேவல் சத்தம் எங்கள் அலாரம்.
ஆதவன் மேலெழுந்தால் ஊரே கொள்ளும் அலங்காரம்.
வண்டிமாட்டுச்சத்தம் ஊரின் முதல் சங்கீதம்.
வரப்புகளின் வழியே பணிக்கு விரைந்திடுவர் மக்கள்.
வாகன இரைச்சல்,புகை, வழிநெரிசல் இல்லை
வந்ததில்லை வழிப்பறிகள்,கெடுபிடிகள் தொல்லை.
விபத்துக்கள் ஆபத்துக்கள் என்றெதுவும் நிகழ்ந்ததில்லை
வெளிநாட்டு வாழ்வில்கூட இந்தளவு மகிழ்ந்ததில்லை.
சின்னகுளத்தில் மூழ்கிக்குளித்தெழுந்து
அன்னை தயார்ப்படுத்த அவசரமாய் புறப்படுவோம்.
பசுவின் பால் போதும் பகல்வரைக்கும் பசிக்காது.
பள்ளிசென்று வந்ததுமே துள்ளி வயல் சென்றிடுவோம்.
அப்பாவிற்கான ஆகாரத்தில் அரைவாசி உண்டபின்னே
அங்கிருக்கும் வரப்புகளில் எங்கள் ஆட்டம் தொடங்கும்.
பட்டம் விடுவோம் பட்டாம்பூச்சி பிடிப்போம்
சட்டங்கள் இருந்ததில்லை ஆயினும் சரிவரவே இருந்தோம்.
திங்களின் ஒளியில் பலகதைகள் பேசி
எங்களின் இரவுணவும் நிறைவிற்கு வரும்.
தாயின் மடியில் தலைசாய்த்து அயர்வோம்.
மாய உலகில் இதுபோல் ஒரு மெய்வாழ்வில்லை.
பழிசுமக்கும் வருங்காலம் பாவம் இதை
பால் விளம்பரங்களில் மட்டுமே பார்த்தறியும்.
-பிரகவி.

என் அம்மா.

முதன் முதலாக பார்க்கிறேன்.
என் உணர் முதலாக
என் உயிர் முதலாக
என் ஒளி முதலாக
என் வழி முதலாக
என் முதல் உணவாக
என் முதல் அழகாக இருக்கின்ற
உருவமொன்றை பார்க்கின்றேன்.
அன்னை என்ற அந்த உருவம் என்னை தன் உலகம் என்றபடி அள்ளித்தூக்கி அணைத்துக்கொள்கிறது.
முதன்முறையாய் விஞ்ஞானம் முரனாகிறது.
அணைக்கையில் இத்தனை ஒளி பரவி உள்ளன்பாய் நிறைகிறது.
-பிரகவி.

நினைவெல்லாம் நீதான் நிறைகின்றாய்.

நிலவு சுடும் என்று கண்டேன்
நிலவே நீ என்னை கடிந்துகொள்கையில்.
சூரியன் கூட சமயங்களில் குளிர்கிறது
உன் பார்வையின் பரிவுகளில் அது பதிவாகியது.
நரம்புகள் முழுதுவதும் உன் நினைவுகள் ஓடுது
நாடியும் நாளமும் உன் பெயரைத்தான்
பாடுது.
நினைவுகள் முழுவதும் நீதான் நிறைகிறாய்
இருந்தும் எடைபார்த்தேன் சற்று குறைந்திருக்கிறேன்.
நட்சத்திரங்களை  எண்ணிக்கொண்டேயிருக்கிறேன்.
ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்று குறைகிறது.
உன் கண்ணசைவில் ஒவ்வொன்றாய் தற்கொலைசெய்கிறதோ?..
உன் கொஞ்சல் மொழிகளை உலக இலக்கியமாய் மொழிபெயர்த்து போகவே
வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் வருவதாய் வராந்த பத்திரிகையில் பார்த்தேன்.
என் சிறுதவறுக்கும் நீ தினம் சிரிப்பாய்.
அந்தச்சங்கீதம் காதல்தேசத்தின் தேசிய கீதமாக்கப்பட்டுள்ளது.
பூக்களும் இப்போ புரட்சி செய்கிறது
புடவையில் உன்னை பார்த்தபோது
தமக்கும் வேண்டும் தனிச்சோலையும் சேலையும் என்று.
வண்டுகளை சொல்லிக்குற்றமில்லை ஒரு பூவின் தேனுக்கே அவை உலகம் சுற்றும்.
உயிர்பூ உனக்காக அவை உலகப்போரே இயற்றும்.
நினைவுகளின் ஒவ்வொரு படிகள்தோறும் உன் தடங்கள்
நம் காதல் புத்தகத்தின் பாடங்கள் அவை.
எல்லாம் எனக்குள்ளேயே இருந்தன.

தேடியே பார்க்கிறேன் உன் தடங்களை வெளியிலே-நீ
தெளிவானவள்
தடயமேதுமின்றி எந்தன் இருதயம் நுழைந்தவள்
வந்த வழியை விட்டு விழிவழி சென்றவள்
இரண்டுக்கும் வலி தந்து அதை இன்பமென்றல்லவா எனை ஒப்புவிக்கச்செய்கிறாய்.
-பிரகவி.

Tuesday, February 26, 2019

கார்த்திகையின் பார்த்தீபன்கள்

தேசம் சார்ந்த உங்கள் நேசம் பெரியது
திரும்பிவந்த செய்திகளும் வெற்றுடலும் உங்கள் தியாகம் சொன்னது
வேசம் இல்லா வீரமிகு மறவர்கூட்டம்
பாசமிகு தாயகத்தின் விடுதலையே நாட்டம்
தேசத்தின் சுத்தமதை சித்தமெனக்கொண்டு-தம்
தேகத்தின் ரத்தமதை மொத்தமுமாய் தந்தவர்கள் நீங்கள்.
உங்களின் லட்சியங்கள் இனி எங்களுடையது.
உங்களின் கனவுகளும் இனி எங்களுடையது.
உங்களின் வழிகளில் இனி நாங்கள்
ஒளிவிளக்கென வழிகாட்டவேண்டும் நீங்கள்.
உயிர்த்தியாகம் உயர் தியாகம்
துயர்கனத்த இதயத்தோடு துதிக்கின்றோம் உமை நாளும்.
#துயிலும் தூயவர்கள்.
-பிரகவி

இலட்சிய தலைவன்

கனவுகள் வலிதாய் இருந்தன
பார்வையும் வலுவாய் இருந்தது
லட்சியம் உயர்வாய் இருந்தது
இதன்பொருட்டு
லட்சத்தில் ஒருவனானாய்
லட்சியத்தலைவனானாய்
உச்சத்தில் உயிர்த்தமிழை சேர்க்க -ஒற்றை
அச்சொன்றில் அனைவரையும் கோர்க்க
உயிர்
துச்சமென துணிந்திட்ட படையோடு நீ
பலர்
மெச்சும்படி உருவான விடுதலையின் தீ.
இருக்கின்றாய் இன்னும் எனும் நம்பிக்கை போதும்
பொறுக்கின்றோம் துன்பம் எல்லாம்
இன்னும் சில காலம்
படைமீளும் நடை நீளும் பொழுதொன்றில் நானும்-நீ
அடைகாத்த அக்கினிக்குஞ்சொன்றாய் ஆவேன்-உன்
பெயர் சொல்ல தமிழ் வெல்ல புறப்பட்டு
போவேன்.
தாயுமானவன் உன் தாயகம் உருவாகியே தீரும்.
கொற்றத்தமிழின் ஒற்றைத்தலைவனுக்கு நற்றமிழில் நான்தருவேன் ஜனன தின வாழ்த்துக்கள்.
ஒற்றைப்பெருமை உன்னத தலைமை அகவைநிறைவு அகமதுவும் நிறையும்.

 

Friday, February 15, 2019

உழவே தலை

           $ உழவே தலை $

பயிர் வளர்க்க மறந்தோம்- தினம்
வயர்களுடன் இருந்தோம்- இதை
வளர்ச்சி என்றே நினைத்தோம்-ஆனால்
வளர்ச்சி என்பது உயர்ந்து செல்வது
வளைந்து சரிவது வளர்ச்சியல்ல
வீழ்ச்சிக்கான முன்னோட்டமே என
விஞ்ஞானமே வந்து சொன்னாலும் அதை விருப்பிடுவோம்,பகிர்ந்திடுவோம்
இறுதிவரை விளங்கிக்கொள்ள மாட்டோம்

உழவே தலை அதில் உழைக்க தலைப்படு
பயிர்செய் அது நாளை  உயிர்காக்கும்.
வேளான்மை தான் என்றும் மேன்மை
விளங்கிவிட்டால் தேசம் காணும் நன்மை.
உக்கும் கழிவை கொண்டொரு உரம்செய்
மக்கும் யாவையும் மண்ணிற்கே ஸ்திரம்.
நிற்கும் பயிர்களிற்கு நீ அதை உரமாக்கு
நாளை அது உந்தன் வாழ்வை ஸ்திரமாக்கும்.
மண்புழு ஓணான் செண்பகம் வரட்டும்
மண்ணிற்கு அவற்றின் சேவையை தரட்டும்.
என்றிவை இங்கு இல்லாமல் போகுமோ
அன்றைக்கு தொடங்கிடும் மண்ணின் அழிவு.
என்றைக்கும் நினைவில் வை இயற்கையே தோழன்.
இஷ்டப்படி செயற்பட்டால் இயற்கைதான் காலன்.
தன்னிறைவென்பது மண்ணில்தான் சாத்தியம்
உண்மையாய் செய்தால் உழவிலும் நிறைவுவரும்.

-நன்றி
R.J.பிரகலாதன்.