Tuesday, June 2, 2015

புகையில்லா தே(ச/க)ம்

புகை உண்ட தேகம் பகைமூண்ட தேசம்
வலி தந்தே தீரும் பலி கொண்டே ஆறும்
மிகையான எதுவும் உயிரின் பகையாக மாறும்
தொகையான புகையால் உடலெங்கும் நாறும்.

மூச்சோடு இழுக்கின்ற புகை உள்ளே போகும்- முழு
வீச்சோடு இயங்கும் கலம் இயங்காமல் போகும்
பேச்சோடு செயல்கள் யாவும் மிக தாமதமாய் ஆகும் -சிறு
காய்ச்சலிற்கும் உடல் இப்போ தாங்காது போகும்.

போன புகை புற்றுநோயுடன் பேச்சு வார்த்தை தொடங்கும்
ஆனமட்டும் உடலும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் தொடங்கும்
ஆடுமட்டும் ஆடியவன் ஆண்மை குறைய தொடங்கும்
ஆதரிக்க யாருமின்றி அவன் உயிரதுவும் அடங்கும்.

புகை நுழைவது சுலபம் உடலில் விளைவது கலகம்
புகை கொண்ட வாழ்வால் இருண்டிடும் உலகம்
புகை கண்டு உந்தன் புன்னகையும் விலகும்
புற்றுநோயொன்றே உன் ஒரே உறவாய் பழகும்.

இழுக்கின்ற புகையால் முகம் பழுத்திங்கே போகும்
புழுத்தின்ற பழம் போலே கலம் யாவும் புழுத்திங்கே போகும்
பளிச்சிடும் பல்மேல் காவி படிந்திங்கு போகும்
வலிமிகும் உடலெங்கும் ரணமாகி போகும்

உட்சென்ற புகை மெல்ல உடலதை உருக்கும்
வெளிவரும் புகையால் உதடுகூட கறுக்கும்
ஒரு விரல் போலிருந்தும் உயிர்க்கழுத்தை நெரிக்கும்
உருக்குலைந்த உருவம் உனை உலகம் கூட வெறுக்கும்.

இருவிரலின் ஆதரவில் அது ஆட்சியமைக்கும்
இது மட்டும் இன்பம் என்றே அது காட்சியமைக்கும்
இதழ்களில் ஏறி இதயம் வரைக்கும் அதுவாயே தாவி- உன்
இறப்பின் காரணம் தான் என சாட்சியுமளிக்கும்.

முச்சில் பயணம் தொடக்கும் முழு வழியும் அடைக்கும் -குருதி
பாய்ச்சும் குழாய்களிற்கும் கொடிய நச்சை கொடுக்கும்
ஏய்ச்சு விடும் வயதில் இருபாலாரையும் தாக்கும் -அது
இறுதி வரை இன்பமாக்கி தன் வழியில் மேய்க்கும்.

பக்கெட்டின் உள்ளே பளிச்சிடும் பல்குழல்
நிக்கொட்டின் நச்சை நிரப்பிய நீள்குழல்
திக்கெட்டும் தடையின்றி கிடைக்கும் தீக்குழல்
உயிர்க்கெட்டும் தூரத்தில் உலவிடும் சாவின் நிழல்.

புரிந்து கொள்வோம் புகைப்பிடிப்பை விட்டொழிப்போம்
புது முயற்சி எடுப்போர்க்கும் புத்திமதி சொல்லிவைப்போம்
புரியாமல் தொடர்வோர்க்கும் புரியும் படி சொல்வோம்
புகையில்லா புது உலகை நாம் சேர்ந்தே வெல்வோம்.

             பிரியமுடன் பிரகலாதன்.
                  31 : 05 : 2015.