Wednesday, September 30, 2015

சர்வதேச சிறுவர் தினம்.

இனிய காலை மலர்ந்திருக்கிறது எல்லோருக்கும் இந்த நாள் இனிய சந்தோசமான நாளாக அமைய இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு இன்றய நாள் ஒரு முக்கியமான நாள்.எங்கள் மத்தியில் இருக்கின்ற எங்களோடு  வாழுகின்ற இரு வேறு வயதினரை நினைவுகூருகின்ற நன்னாள்.ஆம் இன்று சர்வதேச குழந்தைகள்  தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினமும்கூட. நாங்கள் நிறையவே கவனிக்கவேண்டியவர்களாக இருக்கின்றவர்களை நினைக்கின்ற தினம். இந்த இடத்தில் உங்கள் சிந்தனைக்கு ஒரு சின்ன கதை ஒன்றை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.சீன தேசத்திலே ஒரு காட்டுப்பிரதேச ஊரில் ஏழைக்குடிசையிலே ஒரு தகப்பனும் அவருடைய சின்ன மகனும் வசித்து வந்தனர்.ஒரு நாள் அந்த இடத்திலே ஏற்பட்ட காட்டுத்தீ அனர்த்தத்திலே  அவர்களுடைய வீட்டின் கூரை எரிந்து சாம்பலாகிவிட்டது.ஏழையான அந்த தகப்பன் செய்வதறியாது நம்பிக்கை இழந்து சோகமாயிருந்தார்.ஆழ்ந்த யோசனையிலிருந்தவர் தன் பிள்ளையின் புத்தகத்தின் பின் புறத்திலே தன்சோகத்தை இவ்விதமாய் எழுதினார் " எரிந்தது வீடு இனி........ என்று ஏக்கத்தோடு அதை முடிக்காமல் போய்விட்டார்.தன் அப்பாவின் கவலையை உடனிருந்து பார்த்த அந்த சின்ன மகன் அந்த வசனத்தை அவரை ஆறுதல் படுத்தும்படியாய் முடித்து வைத்தான்.வெளியில் சென்று வந்த தந்தை மீண்டும் அந்த புத்தகத்தை பார்த்தபோது  ஓடிப்போய் தன் மகனைக்கட்டிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார். அந்த சின்ன பையன் இவ்விதமாய் எழுதியிருந்தான் " எரிந்தது வீடு இனி.....
தெளிவாய் தெரியும் நிலா" இவ்வளவு நாளும் எங்கள் வீட்டின் ஓலைக்கூரையின் சிறு ஓட்டைக்குள்ளாக அரைகுறையாக தெரிந்த நிலா இனி முழுமையாய் தெளிவாய் தெரியப்போகிறது என்ற சந்தோசத்தை ஒரு புது நம்பிக்கையை இன்னல்களிலிருந்தான நம்பிக்கையின் வெளிச்சத்தை அந்த சின்னமகன் தன் தந்தைக்கு கொடுத்தான். இந்த நம்பிக்கையை தான் இன்று எம்பிள்ளைகள் எமது முதியோர் எம்மிடம் எதிர்பார்க்கின்றனர். சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதன் காரணத்தை நீங்கள் அறிந்ததுண்டா.நிறையவே இருப்பினும் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது இவ்இரு வயதினரும் மற்றவர்களில் தங்கி வாழ்கின்றவர்களாக விசேட கவனிப்பிற்குரியவர்களாக, பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதேயாகும்.இன்னும் சொல்லப்போனல் முதுமை என்பது இன்னுமோர் மழழைப் பருவமே.
இவ்வாறானதொரு தினம்
அனுஷ்டிக்கப்படுவதற்கான
காரணம்
சிறுவர்களுக்கெதிராக
அரங்கேற்றப்படுகின்ற
துஷ்பிர யோகங்ளையும்
அநீதிகளையும்
இயன்றளவு குறைத்து
அவர்களுக்கான சகலவி
தமான உரிமைகளையும்
பெற்றுக் கொடுப்பதேயாகும் .
இன்றையஉலகம் எதிர் நோக்கும்
மிக முக்கிய சமூகப்
பிரச்சினைகளுள்
ஒன் றாக சிறுவர் மீதான
துஷ்பிர யோகம்
விளங்குகின்றது. சிறுவர்
துஷ்பிரயோகம்
என்ற விடயமானது
வளர்ச்சி அடைந்த மற்றும்
வளர்ச்சி
அடைந்து வரும் நாடுகள் என்ற
எந்தவித
வேறுபாடுகளுமின்றி உலகம்
முழுவதும் காணப்படும்
சர்வதேசத்தின்
கவனத்தை ஈர்த்த
பிரச்சினையாக இருந்தாலும்
கூட வளர்ச்சி அடைந்து வரும்
நாடுகளில் அது ஒரு பாரிய
பிரச்சினையாக
உருவெடுத்து வருகின்றது .
சிறுவர்கள் என்போர்
மனித சமூகத்தின் மிக முக்கிய
பகுதியினராகக்
கருதப் படுகின்றனர் .
அத்தோடுஅவர்கள் அடுத்தவர்
களில் தங்கிவாழ்கின்ற
பலவீனர்களாகக்
காணப் படுவதனாலேயே
அவர்களது உரிமைகள்
அதிகம் மீறப்படுகின்றன .
இவ்வாறான உரிமைமீறல்கள் ,
துஷ்பிரயோகங்களில்
இருந்தும்
சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும்
பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு
வந்துள்ளன.
அவற்றிடையே 1989 இல் ஐ .நா .
சபையில் வெளியிடப்பட்ட
சிறுவர் உரிமைகளைப் பற்றிய
கொள்கையானது
சிறுவர்களைப்
பாதுகாத்தல் தொடர்பாக
குறிப்பிடத்தக்க
அளவு ஏற்பாடுகளை கொண்
டுள்ளது.
மேலும் ஐ. நா சபையானது 18
வயதுக்குட்பட்ட
அனைவரையும்
சிறுவர்கள் என வரையறுத்
துள்ளது .
சிறுவர்கள் எதிர்கால உலகின்
அத்திவாரம்
என்ற வகையில்
அவர்களது எதிர்காலத்தைச்
சிறப்பாக்கத் திட்டமிட்டு
வழிநடத்த வேண்டும். எமது நாட்டிலும் சிறுவர்களிற்கெதிராக நிகழ்தேறிக்கொண்டிருக்கும் வன்முறைகளை நாம் நாளாந்தம் அறிந்தவண்ணமே இருக்கின்றோம். இவற்றிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான உரிய இறுக்கமாக சட்டங்களை அமுல்படுத்துவதன்மூலமும் வன்முறையாளர்களிற்கு சரியான தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமும் சிறுவர்கள் எங்களிடம் எதிர்பார்க்கின்ற பாதுகாப்பை நம்பிக்கையை நாம் வழங்க முடியும். சிறுவர்கள் மட்டில் அவர்களிற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டும். அவர்களை அவர்களது திறமைகளை மதிக்க வேண்டும்.
உரிய வயதில் உரிய கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அவர்களுக்குள்ள உரிமைகள் அவர்களுடைய கடமைகள் தொடர்பில் அவர்களிற்கு போதிக்கவேண்டும்.
பண்பாக நடத்தவேண்டும்.கண்ணியமாக இன்சொல்லால் அவர்களுடன் பேச வேண்டும்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.
மற்றவர்கள் முன்பு தண்டிக்கவோ கண்டிக்கவோ கூடாது.
ஆடைகளின் நேர்த்தி பற்றி கற்றுக்கொடுக்கவேண்டும். பெற்றோராக ஆசியராக ஒவ்வொரு பிள்ளையிலும் அக்கறை கொள்ளும் ஒருவராக நீங்கள் இருக்கவேண்டுமாயின் முதலில் அவர்களுடன் பேசவேண்டும்.அவர்களுக்குள்ள தேவைகள் தொடர்பில் அவர்களிற்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிய வேண்டும். அப்போது அவர்களிடத்தில் ஒரு நம்பிக்கை உங்கள் மீது உருவாகும்.மதிப்பு ஏற்படும். இதை நீங்கள் அவர்களிடத்தில் உணரும் தருணம் அவ்வளவு அழகானது.உருவாக்குங்கள் இன்று இந்த நல்ல நாளில் சபதமெடுங்கள் உங்கள் வகுப்பறையிலிருந்து புறப்படும் ஒவ்வொரு பிள்ளையும் உலகை வெல்ல உருவாக்குங்கள்.நல்ல சிந்தனைகளை கற்றுக்கொடுங்கள்.கண்ணியத்தை நீதியை நல்ல கல்வியை நம்பிக்கையை நேசத்தை பெற்றுச்செல்ல அவர்களை வழிநடத்துங்கள்."நல்ல மனிதர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்." நன்றி வணக்கம்.     
                     பேரன்புடன் பிரகலாதன்.

அழியாக்காதல்

நேற்றிரவு ஓர் கனவு
நீதான் அங்கும் நின்றிருந்தாய்.
நீலக்கண்ணில் நிலவும் நானும் தெரிந்தோம்
நீதான் கேட்டாய் நிலவை நோக்கி
நாங்கள் உலவுமிடத்தில் உனக்கென்ன வேலை என்று.
நிலவோ மௌனம் நான் தான் பதில் தந்தேன்
உலவும் இடத்தில் உன்னோடு துணைவர
உன் அழகில் இல்லையெனினும் ஓரளவில் அழகாய் ஒரு தோழி உண்டென்றால் உனக்கும் ஓர் துணிவென்றேன்.
உன் நீள்விழிப்பார்வை வாள் என வீசி பின் வாய் மலர்ந்தாய்.
உன் மேல் நான் கொண்ட நம்பிக்கையே என் ஒரே துணிவும் துணையுமென்றாய்
மறுமொழி ஒரு மொழி பேச துணிவின்றி தூங்கிவிட்டேன்.
அர்த்தசாமத்திலும் அழியாக்காதலின் அர்த்தம் அழியவில்லை அழகாய் சொன்னாய் 'நம்பிக்கை அதானே எல்லாமே' .                                         
                                              ..பிரகலாதன்.
                                                28.09.2015

Wednesday, September 23, 2015

பொறுமை தரும் பெருமை.

பொறுமை கடலினும் பெரிது
தருமே மனிதரில் தனிச்சிறப்பு.
பெருமை இதன் வழி வருமே
இரண்டும் மனதிற்கிதமே.

பொறுமையை பொதுக்குணமாய் கொண்டு விடு
பூமியைக்கூட நீ ஆண்டு விடு
பணிவினை உன்னிடம் செதுக்கிக்கொள்
பெருமையை ஓர் பதக்கமாய் கொள்.

புறந்தள்ளும்போதும் பொறுமை கொள்- பின்
புதையலாய் வெளிப்பட்டு பெருமை கொள்.
அறந்தாண்டி நடப்போர்க்கும் அதிகாரம் வகிப்போர்க்கும்
அழிவுண்டு என்பதை அடிக்கடி நினைவூட்டும் உன் பொறுமையும் பெருமையும்.

தோழனே துயர்விலக்கு தோல்வியிலும் மிஞ்சியுண்டு ஓர் இலக்கு
நாளைய வெற்றிக்கு அதுதான் விளக்கு
துணிவைச்சேர் தொடர்ந்து பணி செய்
சாமியே தோற்கும் உன் சகிப்பில் பூமியும் தோற்கும் பகை தன் பிழை ஏற்கும்
தோழனே துயர்விலக்கு தோல்வியிலும் மிஞ்சியுண்டு ஓர் இலக்கு
நாளைய வெற்றிக்கு அதுதான் விளக்கு.        
                      ஆர்.ஜே.பிரகலாதன்.