Wednesday, June 22, 2011

உன்னைச் செதுக்கு..

உன்னைச் செதுக்கு..

நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கு
நேசத்தின் சிந்தனையை நெஞ்சில் செதுக்கு
நிகழ்கால கடமைகளை நொடிக்குள் அடக்கு
எதிர்கால கடமைதனை இன்றே தொடக்கு
இன்றில் நீ இனிதாக வாழப் பழகு - இனி
நாளையும் உனதாக்கி ஆளப்பழகு
எதைத்தான் கண்டாய் இதுவரை அழுது,
இருப்பதைக் கொண்டெழு இறைவனைத்தொழுது
துணிந்து விடு எதிலும் தொடர்ந்து செயல்படு
விடிந்துவிடும் உலகமும் உன்னோடு.
                                          பிரகலாதன்.

நடை.

        நடை.

உலகின் நடை உணர்ந்த பின்னே
உனது நடை உணர்ந்து நட
அடையும் இடம் தெளிந்த பின்னே
இடையில் தடம் நெளிவதில்லை,
அறிவின் வழி நடந்த பின்னே - நெறி
பிறழ்வின் வழி தொடர்வதில்லை,
முடிவிதென்று தெரிந்த பின்னே
துணிவதொன்றே தரும் பலனை
துணிந்தவுடன் தொடங்கிவிடு செயலனைத்தும் - அதில்
தினம் பற்றுதல் வந்துவிடும்
தொடர் வெற்றியைத் தந்துவிடும்.
                                     R.J.Prakalathan.

கவி யாசி.

கவி யாசி.

அழகை ரசி அதில் அன்பை ருசி
அளவாய் புசி அனைத்தும் நேசி
அகிலந்தனை உரசி அதழல் நீ வசி
அறிவூறத் தினம் தேடி வாசி - நல்
நெறி முறையை நீ நாடி யாசி
உலகம் கிடக்குது பொய்மையைப் பூசி
உடனே உடைத்தெறி நீ வாய்மையின் ஊசி
அன்னை என்பவள் உனக்கொரு காசி
அவளை வணங்கிவிடு அகன்றிடும் தூசி
ஆழமாய் யோசி குறு நீளமாய் பேசி
அனைவர் மனதிலும் அகல்விளக்காய் வசி.

Sunday, June 19, 2011

வாழ்கை

                             வாழ்கை

தேடல் கொள் தினம் தித்திக்கும் வாழ்க்கை
ஊடல் கொள் உனை புதிப்பிக்கும் வாழ்கை
நம்பிக்கை வை நலம் தரும் வாழ்க்கை - எதிலும்
நம்பி கை வை சுகம் பெறும் வாழ்க்கை


துணிவு கொண்டெழு தூரமில்லை வாழ்க்கை
பணிவு கொண்டிரு பாரமில்லை வாழ்க்கை
விவேகம் தனை நிறை வளமாகும் வாழ்க்கை
வீண்வேகந்தனைக்குறை உரமாகும் வாழ்க்கை


பொறாமை, புறம்பேசல் பொருத்தமில்லா வாழ்க்கை
பொறுமை, அறம்பேசின் வருத்தமில்லை வாழ்க்கை
திறந்த மனதோடிரு தெவிட்டாது வாழ்க்கை
நிறைந்த மனதோடிரு நிலை பெறும் வாழ்க்கை.


                                                                                             R.J.Prakalathan.

Wednesday, June 8, 2011

எங்கும் தமிழ்

       எங்கும் தமிழ்

எங்கும் தமிழ் எங்கள் சங்கத் தமிழ்- நிதம்
பொங்குந் தமிழ் எங்கள் தங்கத் தமிழ்
வித்தகத் தமிழ் என் புத்தகத் தமிழ்- சுவை
தித்திக்கும் தமிழ் என் புத்திக்குந் தமிழ்


வீரத்தமிழ் நெஞ்சின் ஈரத்தமிழ்
சூரத்தமிழ் சொல்லின் காரத்தமிழ்
நாட்டியத்தமிழ் வழி காட்டியாய்த் தமிழ்
ஏட்டிலும் தமிழ் என் பாட்டிலும் தமிழ்


வெற்றித் தமிழ் விடுதலைப் பற்றால் தமிழ்
கொற்றத் தமிழ் கொண்ட தலைவன் தமிழ்
கொஞ்ச தமிழ் பிஞ்சு தமிழ்- உலகை
விஞ்சு தமிழ் என் நெஞ்சில் தமிழ்
              
                     பிரகலாதன்.

அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.

அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.


உண்மை அன்பின் முழு வடிவம்
தொன்மை தொட்டு நாம் தொழும் வடிவம்
என்னை உன்னை இயங்க வைக்க – தன் 
எண்ணம் தன்னை எமக்களிக்கும்
கீதமாய் வாழ்வின் நாதமாய் 
வேதமாய் வேண்டும் யாதுமாய்
என்றும் போதுமாய் உள்ள பூரணம்
பூமியில் பதிந்து விட்ட புதிய சொர்க்கம்

வறுமையின் பிடியிலும் பொறுமையைக் காத்தவள்
சிறுமையின் பிடியிலும் பெருமையைச் சேர்த்தவள்
நெற்றிக்கு முன்னே நியாயம் சொல்பவள் - என்
வெற்றிக்குப் பின்னே உபாயம் சொல்பவள்

குருதியைத் தந்தவள் பாலாக்கி - தினம்
உறுதியைத் தந்தவள் ஆளாக்கி
அன்னையே உன்னை நான் ஆராதிக்கின்றேன் - என்
அகிலமே நீதான் அதை ஆமோதிக்கின்றேன்,
உன்னையே குறளாக்கி ஏறெடுக்கின்றேன் - கவியில் 
என்னையே பொருளாக்கி பேரெடுக்கின்றேன் புவியில்.


                                                                             பிரகலாதன்.