Sunday, April 14, 2019

சக்தியின் பெருவிழா.

தெள்ளுதமிழெடுத்து தேனமுது தனைக்குழைத்து
அள்ளியிறைக்கவென்றே வந்திருக்கும் அறிஞர் முன்னே -ஒரு
பிள்ளைக்கவி நானும் பிழைகளும் சிலகொண்டு
மெல்ல மேடையேறி கவிபாட இங்கே வந்துள்ளேன்-முன்னுள்ளோர்
கல்லைக்கொண்டெறிந்திடாது காத்திடுவாய் கலைவாணி.

தேவிகளின் திருநாமம் தனைப்போற்றும் திருநாளில்
துறைசார்ந்தோர் ,பெரியோர்கள்,பிள்ளைகள் உங்கள் முன்னே
பறைசாற்ற பைந்தமிழில் பாடுகின்றேன் கேளீர்.
குறையேதும் உண்டென்றால் பெருமனதால் மன்னிப்பீர்.

சக்தி தரும் தேவிகளின் திருவிழா இது
பக்தியுடன் போற்றியிங்கே வணங்கிடுவோம் வாரீர்.
இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞானாசக்தி
இவை மூன்றும் கொண்டவள் அன்னை பராசக்தி.
எமக்காக அவளிங்கு வடிவெடுத்தாள் மூன்றாய்
எம்வாழ்வும் வளமாகும் அவளருளில் நன்றாய்.

அழியாச்செல்வமதை பொழியச்செய்பவள் லக்ஷ்மி.
பொழியும் செல்வமதை மேலும் பெருகச்செய்பவளும் லக்ஷ்மி.
துளியும் குறைவையாள் எம் வழிகள் சீர்செய்வாள்.
பழியிலா செல்வம் சேர பத்மா அவள் பாதம் தொழுவோம்.

நாற்திசை உள்ளோரும் நலம்பெறவேண்டியே
தேவரும் அசுரரும் தொடங்கிய திருப்பணியில்
பாற்கடலில் இருந்தெங்கள் திருமகள் தோன்றினாள்
பாமரனும் வளம்பெறவே அவள் தேவியாய் உருமாறினாள்.

பொருள் இல்லார்க்கு இப்பூவுலகில்லை இது வள்ளுவன் வாக்கு- என்
அருள் உள்ளோர்க்கு அழியாச்செல்வமுண்டு இது அலைமகள் வாக்கு.
இல்லானை இல்லாளும் வேண்டாள் இது ஔவை அன்று சொன்னது.
இல்லானை எல்லாம் உள்ளவனாக்குவேன் இது தேவி என்றும் சொல்வது.

யுகங்களிற்கேற்ப அவள் எடுக்கும் வடிவங்கள் எட்டு- செல்வ
சுகங்களிற்கேற்ப அவளருள் கிட்டும் தொன்றுதொட்டு.
நிலையான செல்வங்கள் அவளிங்கு தருகையில் வடிவங்கள் பதினாறு.
விலையேதுமில்லா அவள் செல்வங்களால் எம் மனம் ஆறும்.

பிருகுமுனிவரின் மகளாய் உருவம்கொள்கையில் அவள் ஆதிலக்ஷ்மி.
பெருகும் பொன் பணம் தருகையிலே அவள் தனலக்ஷ்மி.
பயிர்கள் செழிக்கச்செய்கையிலே அவள் கொள்ளும் வடிவம் தானியலக்ஷ்மி.
உயிர்கொண்ட கால்நடை வளம்பெருக்க அவள் கொள்ளும் வடிவம் கஜலக்ஷ்மி.
குழந்தை செல்வம் குறைவின்றி கிடைக்க  எடுக்கும் வடிவம் சந்தான லக்ஷ்மி.
குன்றாவீரம் இக்குவளயம் கண்டிட அவள் எடுக்கும் வடிவம் வீரலக்ஷ்மி.
வாழ்வின் காரியம் யாவும் வெல்ல அவள் விஜயலக்ஷ்மி என்றாவாள்.
வாழ்வுமுழுதும் வளம்பெறும் கல்வி தந்து அவள் விஜயலக்ஷ்மியும் ஆவாள்.
எட்டுத்திருவுருவங்கள் எங்கள் அலைமகள் எடுப்பாள்.
எல்லோர்க்கும் எல்லாமும் என்றே எங்கள் திருமகள் கொடுப்பாள்.

கற்ற கல்விக்கோர் தொழிலும் கிட்டும்-அன்னை
உற்ற பொழுதுகளில் உடனிருந்து நடத்தி வைப்பாள்.
கற்கும் கல்விக்கும் பெரும் சித்தி கிட்டும் -லக்ஷ்மி
கடாட்சம் கிடைத்துவிட்டால் பெரும் முக்தி கிட்டும்.

விஷ்ணுவின் வலதுதோள் இவள் வதிவிடம் ஆகிடும்.
துஷ்டரும் நெருங்காமல் துணைசெய்வாள் திருமகளே.
தாம்பூலத்தில் இவள் வாசமிருக்கும் தாமரையிலும் இவள் வாசம் இருக்கும்
தாங்கும் அடியவர் யாவரின்மேலும் இவள் பாசமிருக்கும்.

அச்சடித்த காகிதமாம் பணம் மட்டும் செல்வமல்ல
அச்சழகும் துச்சமாகும் எம் அழகான மொழிகொண்டு
அன்பு சிறுவர் நீங்கள் அன்றாடம் பள்ளிவந்து -பெறும்
அறிவும் கலைகளுமே அழியாச்செல்வமென்று
அலைமகளே சொல்கின்றாள் அகமகிழ்வாய் ஏற்றிடுவீர்.

அன்பை தருவாள் அன்பை உங்களிடமிருந்தும் அன்னை பெறுவாள்.
அழகை தருவாள் அறிவெனும் நிலையழகை அவளிங்கு தருவாள்.
என்றும் அவள்பாதம் வணங்கிடில் எமக்கிங்கு
துன்பம் நெருங்காது துரத்தும் வியாதியும் இருக்காது.

சிறுவர் நாம் சேர்ந்து செந்தமிழில் பாட்டிசைத்து
உருவம் எட்டாய் நிற்கும் உத்தமியாம் லட்சுமியை
திருமாலின் நாயகியை ஒருநாளும் மறவாது
தினந்தோறும் தொழுதிங்கே தீபங்கள் ஏற்றுவோம் திருநாமம் போற்றுவோம்.

மங்கள லட்சுமியே போற்றி
மஹா லட்சுமியே போற்றி போற்றி
திருமகளே போற்றி - எங்கள்
தெய்வத்தாயே தினம் போற்றி போற்றி.

-பிரகவி.




No comments:

Post a Comment