Tuesday, February 26, 2019

கார்த்திகையின் பார்த்தீபன்கள்

தேசம் சார்ந்த உங்கள் நேசம் பெரியது
திரும்பிவந்த செய்திகளும் வெற்றுடலும் உங்கள் தியாகம் சொன்னது
வேசம் இல்லா வீரமிகு மறவர்கூட்டம்
பாசமிகு தாயகத்தின் விடுதலையே நாட்டம்
தேசத்தின் சுத்தமதை சித்தமெனக்கொண்டு-தம்
தேகத்தின் ரத்தமதை மொத்தமுமாய் தந்தவர்கள் நீங்கள்.
உங்களின் லட்சியங்கள் இனி எங்களுடையது.
உங்களின் கனவுகளும் இனி எங்களுடையது.
உங்களின் வழிகளில் இனி நாங்கள்
ஒளிவிளக்கென வழிகாட்டவேண்டும் நீங்கள்.
உயிர்த்தியாகம் உயர் தியாகம்
துயர்கனத்த இதயத்தோடு துதிக்கின்றோம் உமை நாளும்.
#துயிலும் தூயவர்கள்.
-பிரகவி

இலட்சிய தலைவன்

கனவுகள் வலிதாய் இருந்தன
பார்வையும் வலுவாய் இருந்தது
லட்சியம் உயர்வாய் இருந்தது
இதன்பொருட்டு
லட்சத்தில் ஒருவனானாய்
லட்சியத்தலைவனானாய்
உச்சத்தில் உயிர்த்தமிழை சேர்க்க -ஒற்றை
அச்சொன்றில் அனைவரையும் கோர்க்க
உயிர்
துச்சமென துணிந்திட்ட படையோடு நீ
பலர்
மெச்சும்படி உருவான விடுதலையின் தீ.
இருக்கின்றாய் இன்னும் எனும் நம்பிக்கை போதும்
பொறுக்கின்றோம் துன்பம் எல்லாம்
இன்னும் சில காலம்
படைமீளும் நடை நீளும் பொழுதொன்றில் நானும்-நீ
அடைகாத்த அக்கினிக்குஞ்சொன்றாய் ஆவேன்-உன்
பெயர் சொல்ல தமிழ் வெல்ல புறப்பட்டு
போவேன்.
தாயுமானவன் உன் தாயகம் உருவாகியே தீரும்.
கொற்றத்தமிழின் ஒற்றைத்தலைவனுக்கு நற்றமிழில் நான்தருவேன் ஜனன தின வாழ்த்துக்கள்.
ஒற்றைப்பெருமை உன்னத தலைமை அகவைநிறைவு அகமதுவும் நிறையும்.

 

Friday, February 15, 2019

உழவே தலை

           $ உழவே தலை $

பயிர் வளர்க்க மறந்தோம்- தினம்
வயர்களுடன் இருந்தோம்- இதை
வளர்ச்சி என்றே நினைத்தோம்-ஆனால்
வளர்ச்சி என்பது உயர்ந்து செல்வது
வளைந்து சரிவது வளர்ச்சியல்ல
வீழ்ச்சிக்கான முன்னோட்டமே என
விஞ்ஞானமே வந்து சொன்னாலும் அதை விருப்பிடுவோம்,பகிர்ந்திடுவோம்
இறுதிவரை விளங்கிக்கொள்ள மாட்டோம்

உழவே தலை அதில் உழைக்க தலைப்படு
பயிர்செய் அது நாளை  உயிர்காக்கும்.
வேளான்மை தான் என்றும் மேன்மை
விளங்கிவிட்டால் தேசம் காணும் நன்மை.
உக்கும் கழிவை கொண்டொரு உரம்செய்
மக்கும் யாவையும் மண்ணிற்கே ஸ்திரம்.
நிற்கும் பயிர்களிற்கு நீ அதை உரமாக்கு
நாளை அது உந்தன் வாழ்வை ஸ்திரமாக்கும்.
மண்புழு ஓணான் செண்பகம் வரட்டும்
மண்ணிற்கு அவற்றின் சேவையை தரட்டும்.
என்றிவை இங்கு இல்லாமல் போகுமோ
அன்றைக்கு தொடங்கிடும் மண்ணின் அழிவு.
என்றைக்கும் நினைவில் வை இயற்கையே தோழன்.
இஷ்டப்படி செயற்பட்டால் இயற்கைதான் காலன்.
தன்னிறைவென்பது மண்ணில்தான் சாத்தியம்
உண்மையாய் செய்தால் உழவிலும் நிறைவுவரும்.

-நன்றி
R.J.பிரகலாதன்.