Sunday, July 7, 2019

மீளாத்துயர் மே18

வாழ்விடம் நாங்கள் வாழவே கேட்டோம்
வாழ்விடம் எங்கள் சாவிடம் என்றானது.
#மே18.

குருதிக்குள் இருந்த எம் உறுதியை எடுத்து-பெரும்
புழுதிக்கு இரையாக்கி அறுதியாய் அறுத்தது தேசம்.
#மே18.

போர் அவலம் எமக்குமட்டும் பேரவலமானது.
ஊர் முழுக்க போர் பிடிக்க ஓடி ஓடி உடைந்துபோனோம்.
#மே18.

பயிர்செய்து அழகுபார்த்த மண்ணில் -எம்
உயிர்கொய்து அழகுபார்த்தது ஐய்யோ.
#மே18.

தேவனும் இரங்கவில்லை ஒரு தேவதையும் இறங்கவில்லை.
நாதனும் வரவில்லை எந்த நாதியும் அங்கு நமக்கில்லை.
#மே18.

தேசமும் கொண்ட தாகமும் மெல்ல கரைந்தது.
சோகமும் பல தேகமும் கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது.
#மே18.

நீதியை கேட்டு நிதம் அநாதைகள் ஆனோம்
ஆதியாம் எம் இனம் இருந்தும் அனாதிகளானோம்.
#மே18.

பிஞ்சுடல்,பெண்சதை குண்டதன் நஞ்சினை பெற்றது.
எஞ்சிய உயிர்களும் இதன்வழி பெரும்வலி பரிசாய் பெற்றது.
#மே18.

தீராத சோகம் எங்கள் முகவரியானது
ஆறாத ரணங்கள் அடைக்கலம் கேட்டது.
#மே18.

உயிர்வற்றிப்போன உடல்களை கடந்து
உதிரத்தை முழுதும் மண்ணில் விதைத்து
உறவாடி திரிந்த ஊரையும் விட்டுவிட்டு
சொந்தநாட்டிலே அகதிகளாய் ஆனோம்.
#மே18.

பிணந்திண்ணும் விலங்கைவிட இனந்திண்ணும் விலங்குகள் கோடி
உலகத்தின் கண்முன்னே எமை உருக்குலைத்தது கூடி.
#மே18.

நந்திக்கடல் முழுதும் சிந்திக்கிடந்த ரத்தம் சொல்லும்.
தந்திரம்,துரோகம்,சூழ்ச்சி இவை தந்திட்ட பாடம் சொல்லும்.
#மே18.

செந்தணல் மீதினில் கந்தகக்காற்றினில்
செந்நிறமாகின பொன்நிற மேனிகள்.
இப்புவிமீதினில் இன்னொரு மே தனில்
அப்பாவி மாந்தரெல்லாம் மீண்டிட மாட்டாரோ..
#மே18.

தீரா சோகங்கள் இதுபோல் இன்னும் திசையெங்கும் நீளும்.
தியாகங்கள் வழி எங்கள் தாயகம் திரும்பவும் மீளும்.
#மே18.
-பிரகவி.(பிரகலாதன்)

No comments:

Post a Comment