Sunday, November 15, 2015

டெங்கு

 

நலம் வாழ

பரிசோதனை ரகசியங்கள் 9: டெங்கு காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?

Updated: November 14, 2015 13:15 IST | டாக்டர் கு. கணேசன்

   

மழைக்கால மாதங்களில் இந்திய மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. ‘டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தக் காய்ச்சல் வருகிறது. இவற்றைச் சுமந்து திரியும் ‘ஏடிஸ் எஜிப்தி' (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவி, நோய் உண்டாகிறது.

அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரிய அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

ஆபத்து எப்போது?

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

பொதுவாக இந்தக் காய்ச்சல் முதல்முறையாக வரும்போது ஆபத்து வராது; இரண்டாம் முறையாக வரும்போதுதான் ஆபத்து வரும். கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் ஆபத்து விரைவில் வந்துசேரும்.

என்ன சிகிச்சை?

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

என்ன பரிசோதனை?

1. என்.எஸ். 1 ஆன்டிஜென் (Non Structural 1 Protein அல்லது NS1 antigen) பரிசோதனை.

# நோயாளியின் ரத்தத்தில் டெங்கு கிருமிகளுக்கான ஆன்டிஜென் உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனை.

# பரிசோதனை செய்த ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.

# என்.எஸ். - 1 ஆன்டிஜென் இருந்தால் அவருக்கு டெங்கு உள்ளதாகச் சந்தேகிக்கப்படும்.

# குறிப்பிட்ட ஒரு பகுதியில் டெங்கு தீவிரமாகப் பரவும்போது அதிக எண்ணிக்கையில் உள்ள நோயாளிகளைப் பரிசோதனை செய்ய இது உதவுகிறது.

# காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# ஆனால், இதன் முடிவு 62 சதவீதம்தான் சரியாக இருக்கும்.

# நோயை உறுதிப்படுத்த மற்ற பரிசோதனைகள் அவசியம்.

2. டெங்கு ஐ.ஜி.எம். மற்றும் ஐ.ஜி.ஜி. (Dengue IgM, IgG) பரிசோதனைகள்,

# ரத்தத்தில் டெங்கு ஐ.ஜி.எம். மற்றும் ஐ.ஜி.ஜி. எதிர் அணுக்கள் (Antibodies) இருக்கின்றனவா எனக் கண்டறியும் பரிசோதனை இது.

# காய்ச்சல் ஏற்பட்ட நான்கு நாட்கள் கழித்து ஒரு வாரத்துக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதல்முறையாக இருந்தால் ஐ.ஜி.எம். அளவு அதிகமாகவும் ஐ.ஜி.ஜி. அளவு குறைவாகவும் இருக்கும்.

# டெங்கு பாதிப்பு மறுமுறையாக இருந்தால் ஐ.ஜி.எம். அளவு குறைவாகவும் ஐ.ஜி.ஜி. அளவு அதிகமாகவும் இருக்கும்.

3. எலிசா (ELISA) பரிசோதனை

# இதுவும் ஐ.ஜி.எம். எதிர் அணுக்களைக் கண்டறியும் பரிசோதனைதான்.

# அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டது.

# நோய் ஏற்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகுகூட, இதைச் செய்துகொள்ளலாம்.

# செலவு அதிகம்.

# நோயை 90 சதவீதம் உறுதிப்படுத்தும்.

# நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதல்முறையாக இருந்தால் ஐ.ஜி.எம். அளவு அதிகமாகவும், மறுமுறை தாக்குகிறது என்றால் இதன் அளவு குறைவாகவும் இருக்கும்.

4. ஆர்.டி. - பி.சி.ஆர். (RT - PCR) பரிசோதனை

# ரத்தத்தில் டெங்கு வைரஸின் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளையும் ரிவெர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் (Reverse Transcriptase) எனும் என்சைமையும் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

# 90 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

# மிக நுணுக்கமான தொழில்நுட்பத்தைக் கொண்டது.

# நோய் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் நோயை உறுதி செய்துவிடும். இதன் செலவும் கொஞ்சம் அதிகம்தான்.

5. ரத்த அணுக்கள் பரிசோதனை

# இப்பரிசோதனைப்படி, டெங்கு நோயாளிக்கு ரத்த வெள்ளையணுக்கள் குறைவாக இருக்கும்.

# அடுத்து, ஹெமட்டோகிரிட் (Haematocrit - HCT) எனும் பரிசோதனை முக்கியமானது.

# இது, ரத்தச் சிவப்பணுக்களின் கன அளவு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதைப் பரிசோதிப்பது.

# இதன் இயல்பான அளவு 36 - 38 சதவீதம்.

# காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் இந்த அளவு சரியாக இருக்கும். அதற்கடுத்த இரண்டு நாட்களில் இதன் அளவு அதிகரித்தால் டெங்கு என்று கணிக்கப்படும்.

# சிகிச்சையைத் தொடங்குவதற்கும் நோய் கட்டுப்படுகிறதா என்று கணிப்பதற்கும் இது உதவுகிறது.

# எனவே, குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை மறுபடியும் செய்துகொள்ள வேண்டும்.

6. தட்டணுக்கள் பரிசோதனை

# தட்டணுக்களின் (Platelets) சரியான அளவு 1.5 4.5 லட்சம்/டெ.லி.

# டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

# டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.

7. வைரஸ் கிருமி வளர்ப்புப் பரிசோதனை (Virus culture test)

# இதன்மூலம் டெங்கு வைரஸை நேரடியாகக் கண்டறிந்து நோயை நிர்ணயிக்க முடியும்.

# காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில்கூட நோயை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும்.

# செலவு அதிகம்.

# இந்த வசதி வேலூர், சென்னை, புனே போன்ற பெருநகரங்களிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டுமே உள்ளது.

முக்கியக் குறிப்பு

# டெங்கு ஐ.ஜி.எம், ஹெமெட்டோகிரிட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளை நோயாளிக்குக் காய்ச்சல் குறைந்த பிறகு, அதாவது நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் மீண்டும் செய்ய வேண்டும்.

# இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே நோய் சரியாகிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியும்.

# ஒருவருக்குக் காய்ச்சல் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தால், அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை எனக் கொள்ளலாம்.