Sunday, April 14, 2019

நான்.

பாறையில் பாய்கையில் என் பெயர் அருவி.
ஓடையில் ஓடுகையில் என் பெயர்
நதி.
பள்ளத்தில் நிற்கிறேன் என் பெயர்
குளம்.
பருகவும் எனைத்தந்தால் என் பெயர்
ஜலம்.
பேரழிவை தருகையில் என் பெயர் பேரலை.
பேரழகாய் தோன்றுகையில் என் பெயர்
நீர்வீழ்ச்சி.
தூறலாகி பொழிகின்றேன் என் பெயர் மழை.
தரைவரை நுரைதருவேன் என்பெயர் அலை.
வாடையும் வரும் கோடையும் எனை வானுக்கனுப்பி மகிழ்ந்திருக்கும்-பின்
வாடும் பயிரெலாம் மழையென் வருகை கண்டு நெகிழ்ந்திருக்கும்.
காலமும் கொண்ட கோலமும் மாறுவதைப்போல்தானிருக்கும்.
ஞாலமும் அதன் ஆழமும் தன்னை
புதுப்பித்தபடியிங்கே பூத்திருக்கும்.
நானும் அதுபோல்தான்.
நாளும் ஓடுவேன் நல்லதை பாடுவேன்.
வாழும் பொழுதுகளை வரமாக தேடுவேன்.
தேடல்களில் தினம் நான் எனைத்தொலைப்பேன்
விடியல்களில் மீண்டும் எனைக்கண்டு பிடிப்பேன்.
வாடும்பொழுதுகளில் என் பிரியங்களில் திளைப்பேன்-பிறர்
வாடும் பொழுதுகளில் என் பிரியங்களை
கொடுப்பேன்.
தீரா இரவில் விரியும் கானம் போலே
தேயா நிலவொளியில் தெரியும் வானம்போலே -என்றும்
ஓயாது உழைப்பேன் ஒன்றுபட்டு நிலைப்பேன்.

-பிரகவி.

No comments:

Post a Comment