Tuesday, November 13, 2012

இதயத்தின் நாதம் பற்றி இதயத்தில் இருந்து


இதயத்தின் நாதம் பற்றி இதயத்தில் இருந்து

இதயத்தின் நாதமாய் பலரின் இதயங்களில் நிலைத்து நின்ற பெருமைக்குரிய வெற்றி வானொலிக்கு இந்த நாட்கள் மிகுந்த சோதனைக்குரிய நாட்களாய் மாறியிருக்கிறது. இலங்கை வானொலி வரலாற்றில் தனியார் வானொலிகளின் ஆதிக்கம் ஆரம்பிக்க தொடங்கிய காலங்களிலேயே அத்துறைக்குள் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பிரபல அறிவிப்பாளரும், கலைஞருமான திரு A.R.Vலோஷன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் போட்டி மிக்க இந்த ஊடகத்துறையில் புதிய பாதையில் நான்கு வருடங்களிற்கும் மேற்பட்ட கடின உழைப்பின் பலனாய் வெற்றி வானொலி வளர்ந்து நின்றது. 'இது வெற்றி குடும்பத்தின் ஒட்டு மொத்த உழைப்பின் வெகுமதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று எழுதிவிட முடியாது உள்ளது. ஏனெனில் ஓட்டுமொத்த உழைப்பு என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உள்ள ஒரு குழுவின் ஒவ்வொரு தனிநபரும் காட்டும் உழைப்பின் கூட்டுத்தான் ஒட்டு மொத்த உழைப்பாகும். அந்த உழைப்பு எவ்வகையினதாயும் இருக்கலாம். ஒரு நிகழ்ச்சியின் மேம்பாடு, ஒரு நிறுவனத்தை மேம்படுத்தச் செய்யும் நடவடிக்கைகள், பணியாற்றும் ஊழியர் நல மேம்பாடு என வகைப்படும் ஒவ்வொரு உழைப்பிற்கும் அக்குழு உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு அவசியமாகும். இல்லையேல் வெற்றி எளிதில் கிடைக்காது. 
                              அண்மைக்காலங்களில் பெரிதும் வெளிச்சத்துக்கு வந்த வெற்றி வானொலியின் சில பிரச்சினைகளை இந்தப் பின்னணியிலேயே நோக்க முடியும். வெற்றி வானொலி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அது சில உரிமையாளர்களிடம் கைமாறி வந்திருக்கிறது என்ற போதும் இறுதியாக அதை உரிமையாக்கிக் கொண்டவர்களான நிறுவனத்தினர் வெற்றி வானொலி ஊழியர்களின் நலன்களில் அக்கறை காட்டத் தவறியதே பல புதிய பிரச்சினைகளுக்கு வழி கோலியது. ஊழியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை, மற்றும் கடமையாற்றிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாமை என்பன தொடர்பில் ஒரு முடிவைப் பெற்றுத் தரும்படி ஊழியர்கள் முறையிட்ட போதும் நிர்வாகத்தினர் இதனைக் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. தீர்வு தரும் வரை பணிநிறுத்தம் செய்வதாய் ஊழியர்கள் முடிவெடுத்த போதும் நான் முன்னர் குறிப்பிட்ட ஒட்டுமொத்த ஒத்துழைப்பு இங்கு கிடைக்கவில்லை.அரைவாசி எண்ணிக்கையிலான ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மிகுதி உள்ளவர்களும் முன்னைய காலங்களில் ஒழுக்காற்று நடவடிக்கைகளினால் வெற்றியிலிருந்து விலக்கப்பட்ட சிலருமாய் சேர்ந்து வானொலியை தொடர்ந்து இயங்க வைக்கும் பணிகளில் இறங்கினர் அல்லது நிர்வாகத்தினரின் ஏவலுக்கு இணங்கினர். இதில் விடயம் என்னவென்றால் அவர்களிற்கும் அதே பிரச்சினைகள் இருந்தும் எவ்விதம் இப்படி முன்வந்தனர் என்பதே அவர்களிற்கும் உரிமையாளர்களிற்கும் இடைப்பட்ட உறவைக் காட்டி நின்றதோடு மட்டுமல்லாது ஆரம்பம் தொட்டு வெற்றிக்காய் உழைத்தவர்களை வெளித்துரத்தி இடையில் வந்தவர்களையும், இடைவிலகலில் நின்றவர்களையும் பெருமளவில் கொண்ட இந்தக்கூட்டம் உரிமையாளர்களுக்கு காட்டி நின்ற விசுவாசமும் வெளிப்படலாயிற்று. மொழியொன்றின் இருப்பிற்காய் விழியிமை மூடாது வெற்றியாய் உழைத்தவர்களைப் புறந்தள்ளி வாய்ப்பு தந்தவர்களுக்கே வாய்க்கரிசியும் போடும் ஒரு புது இனம் மனிதரில் தலை தோன்றியது கண்டு மகிழ்ந்த உரிமையும், அவர்களை வைத்தே ஆண்டுவிட ஆவல் கொண்டு அவர்களை நிர்வகிக்க போட்டி வானொலியொன்றின் பணியாளர் ஒருவரை விலை கொடுத்து வாங்கி நிற்கின்றது. 
                               புதிய மாற்றம் பிறப்பிக்கும் ஏற்றம் எனும் பெருங்கனவுடன் தொடங்குகிறது அந்தக் கூட்டத்தின் பயணம். ஆனால் தமக்கான நியாயம் கிடைக்கும் வரை முனைப்புடன் பழைய வெற்றிக் கூட்டமும் போராட்டத்தை தொடர்கிறது. உண்மை ஒழிந்திருக்கும் நெடுங்காலமல்ல. ஏனெனில் அதன் தன்மை வெளிப்படுதலே என்ற கூற்றின் படி உண்மை வெளிப்படும் ஒரு காலம். அதுவரை காத்திருக்கலாம் என்பதைத் தவிர நேயர்களுக்கு வேறு வழியிருப்பதாய் புலப்படவில்லை. 
                                    எது எப்படியாய் இருந்த போதிலும் இந்தப் பதிவின் மூலம் வலியுறுத்த வேண்டிய ஒரு சில விடயங்களை முன்நிறுத்தி நிறைவு செய்ய விளைகிறேன். அதாவது எந்த ஒரு முயற்சியின் வெற்றியும் ஒரு கூட்டு உழைப்பின் பலனாய் கிடைப்பதே என்பதை அனைவரும் புரிந்து கொள்வதோடு இவ்விதமான ஊழியர்களுக்கான நலன்கள் தொடர்பில் எடுக்கப்படும் போராட்டங்களிற்கு ஒருமித்து குரல் கொடுத்தல் மற்றும் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடல் மூலமே இவ்வகைப் போராட்டங்களை வென்றெடுக்க முடியும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு உடனடியாய் கிடைக்கக் கூடிய சலுகைகள், நலன்கள் நீண்ட காலத்திற்கு பயன்தரப் போவதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதே இப்பதிவின் முக்கிய நோக்கமாகும். 
பிரச்சினைகளின் போதான நிறைய நேயர்களால் கேட்கப்பட்ட வினாக்ககள் முன்னே கிடைக்கின்றது. அதையும் தாண்டி எதிர்காலம் பற்றிய கானாக்கள் நிறையவே இருக்கின்றது. வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் பழகிப்போன அதே பாதையில் ஆனால் புதிய வழித்தடத்தில் பயணிப்பபோம் லோஷன் குழுவோடு.
பெருங்காயம் தனைநீயும் பொடியாக்கிப் போ
வருங்காலம் தனைவெல்லும் படியாக்கிப்போ.
என்றும் நட்பில்
R.J.பிரகலாதன்
உடுவில் 

Saturday, September 15, 2012

மழலை இன்பம்



மழலை இன்பம்

எந்த கடவுளும் இதுவரை சொன்னதில்லை
தன்னை சத்தமிட்டு துதி என்று
எந்த குழந்தையும் இதுவரை சொன்னதில்லை
தன்னை முத்தமிட்டு மகிழ் என்று
ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
மழலையின் சிரிப்பிலே இறைவனை உணரலாம்
குழலதன் இனிமையில் மனமது மறக்கலாம்
மழலையின் மொழியிலே மறுபடி பிறக்கலாம்

விழுகையின் போதும் அழுகையின் போதும்
குழந்தை அனுபவம் பெறுகிறது
எழுகையின் போதும் உவகையின் போதும்
நமக்கது அனுபவம் தருகிறது
படைத்தவன் இருதயம் படிப்பவன் மூளை
மேதையின் விழிகள் பேதையின் செவிகள்
பிரசங்கி மொழிகள் பிரபஞ்சமே அதன் வழிகள்
இது மழலையின் மகத்துவம் மனிதரில் தனித்துவம்

உன்னை தந்த இறைவன் 
தன்னை காண்பிக்கிறான் இங்கு
அன்னையும் நீயுமே என்றும் 
ஆண்டவனின் முழுமைப் பங்கு

R.J.பிரகலாதன்
உடுவில்

Thursday, April 5, 2012

கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ?

கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ?

விழிகளில் ஒருத்தி எழுதிய விளைவால்
மொழிகளில் நானும் எழுதவே விளைந்தேன்
வலிகளில் சுகமும் வகையெனக் கலந்தாள்
வலியவே நானும் அதில் எனை இழந்தேன்
வெளிகளில் பரந்த பெருங்கடல் தான் நான் - தேன்
துளிகளில் சிலவாய் சிலையவள் வீழ்ந்தாள் - கன்ன
குழிகளில் என்னை கைதியாய் அடைத்தாள் - தன்
வழிகளை மறந்த அகதியாய் உடைத்தாள்
ஒளிகளில் உள்ள நிறங்களாய் தெரிந்தாள்
கலைகளில் உயர்ந்த ஸ்வரங்களாய் விரிந்தாள்
வளிகளில் கலந்த மலர் வாசனையானாள்
உளிகளே வியந்த சிலையாகி போனாள்
வளைவினில் முழுவதும் என்னையே புதைத்தாள் - மன
நெளிவுகள் முழுவதும் தன்னையே விதைத்தாள்
எழுதவும் பயிலவும் இயலாமல் செய்தாள்
எல்லையை அடையாத முயலாகச் செய்தாள்
கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ- இவள்
விழிகளில் விசம் தனை வைத்துள்ள வண்டோ
யாரிவள் என்று இவள் வேர்வரை தேடினேன்
தேரிவள் திறன்தனை திரும்பவும் பாடினேன்
தொலைதூர ஒளி அவள் தொடமுடியாத வளி
விலைபேச முடியதா காதலின் பெரும் சுழி
குளிர்பனிக்கால மழை அவள் அடை மழைக்கால பனி
தளிர்தோன்றி பூ ஆகும் முன்பே எனை உடைத்த தேனி
தேன் குடிக்கும் வண்டுதனை மயக்கும் பூ நீ
நான் வடிக்கும் கவியில் நானே வியக்கும் ராணி.


R.J.பிரகலாதன் 
உடுவில்

காதல் காட்டும் வேலை

காதல் காட்டும் வேலை

இருட்டில் திருட்டாய் - உயிரை
அருட்டும் காதல் - இரு
இதயம் திரட்டும் அதை
முதலில் மிரட்டும் - பின் 
இமைகள் திறக்கும் அதன் வழி
இதயம் பறக்கும் - காதல்
விழிவழி நுழையும் விதிவரை அலையும்
முடிவது புரிந்தும் முழுவதும் இனிக்கும்
இதுதான் வாழ்க்கை என அது காட்டும்
இருவரை இயக்கியே ஒருபடம் ஓட்டும்
ஒரு வரி வாழ்க்கையை ஒருயுகம் ஆக்கும்
உடன் பிறந்தோரையும் புது முகம் ஆக்கும்
உணர்ந்திட முன்பே உயிர்வரை தாக்கும் 
உணர்ந்திட முடியா பயிரிலும் பூக்கும்
விருந்ததை அருந்த முடியாமல் வருந்தும்
விரும்பியே மனமும் திரும்பவும் பொருந்தும்
திருத்தவே வழி தேடி வருந்துது மூளை
திரும்பவும் காதல் காட்டுது வேலை
முடிவது தேடியே முழு உலகமும் ஓடுது
முடிவதே இல்லை என காதலும் தான் பாடுது


R.J.பிரகலாதன் 
உடுவில்

அழகு நீ பழகு

அழகு நீ பழகு

புல்லில் பூத்த பனி நீ - தமிழ்
சொல்லில் வார்த்த கவி நீ
கல்லில் தெரிந்த சிலை நீ
துள்ளித்திரிந்த கலை நீ


வில்லைப் போலே வளைவாய்நீ - மன 
கொல்லைப் புறமாய் நுழைவாய் நீ
இல்லை போ என்றால் குழைவாய் நீ - ஒரு
வெள்ளைக் கனவாய் பொழிவாய் நீ


முல்லை மலரின் உறவா நீ
மல்லிகையவளின் மகளா நீ
புள்ளியில் தெரிகின்ற வானமா நீ
வெள்ளியில் விரிகின்ற கானமா நீ


பிள்ளைப்ப பருவ குறும்பு நீ
எல்லையில்லா இன்பக் கரும்பு நீ
தொல்லை பண்ணும் அழகு நீ
இல்லை என்னாது பழகு நீ


R.J.பிரகலாதன்
உடுவில்

ஜெனிவா பேசு துணிவாய்

ஜெனிவா பேசு துணிவாய்


இறுகிய முகங்களும் உருகிய மனங்களும்
திருகிய செவிகளும் மருகிய விழிகளும்
கருகிய முடிகளும் குறுகிய கைகளும்
உறுமிய வெடிகளால் குருதியில் கால்களும்
பொருமிய நெஞ்சமும் புழுதியில் தஞ்சமும்
இருமிய படியே இன்னும் வறுமையில் நாங்கள்
ஒருமுறை குரல் தனைக் காட்டுங்கள் நீங்கள்.


R,.J.பிரகலாதன் 

Monday, February 13, 2012

வெற்றி வழி! வெற்றி நீ வாழி!!

வெற்றி வழி! வெற்றி நீ வாழி!!

ஆண்டு நாலாய் ஆகும் வேளை- உலகை
ஆண்டு வாழ்வாய் இசை பூண்டு வெல்வாய்.
நீண்ட இரவிலும் நாம் வேண்டுவதெல்லாம்
தீண்டு தேன் தமிழ் கொண்டு தேகமெல்லாம்.

இதயத்தின் நாதம் நீ இன்பத்தின் கீதம் நீ
உதயத்தின் வேதம் நீ பலர் உலகிற்கு யாதும் நீ.
பகலுக்கு படும் நிழல் நீ படர் தழிழுக்கு பெரும் புகழ் நீ.
நகலுக்கு அசல் நீ இந்நானிலத்தின் அகல் நீ.

யுகம் தாண்டி உன் இசை எம் அகம் தீண்டும்
முகம் தீண்டி முழு உடலும் அதை வேணடும்.
இகம் நீண்டு உன் இசை எமை தூண்டும்
இறுதி வரை இசைத்தமிழால் நனை மீண்டும்.

காதலி விழி, கனிமுக மழலை மொழி
பேதலித்தோர்க்கு புதுவாழ்வின் வழி.
புதுப்படை, பொதுப் பணி செய் இசைவழி
பெரும் புகழ் பெற்று வெற்றி நீ வாழி.

என்றென்றும் வெற்றியின் ஆர்.ஜே.பிரகலாதன்.
                                                        ஆர்.ஜே.பிரகாஷ்
                                                         ஆர்.ஜே.பிரவீனா

Wednesday, February 8, 2012

காதல் கொள்ளை

காதல் கொள்ளை

என்னை மெல்லும் முல்லைப் பல்லும்
மெல்லக் கொல்லும் உன் பிள்ளைச் சொல்லும் - காண
வெள்ளைப் புள்ளாய் மனம் துள்ளும் பிள்ளாய்.
கொல்லை முள்ளாய் நிதம் தொல்லை தந்தாய் - ஏதும்
இல்லை என்னுள் இன்று எல்லாம் கொள்ளை.
அள்ளும் வெள்ளம் அது உந்தன் உள்ளம்
அன்பின் வெல்லம் அணைத்தெனை வெல்லும்.

உள்ளமதில் நுழைந்தாய் உன் வெள்ளமதில் மிதந்தேன்
உடனடியாய் குழைந்தாய் என் உயிர்தனையும் இழந்தேன்
வில்லதிலே புறப்பட்ட ஒரு அம்பாய் நீ – வர
கள்ளதிலே கட்டுண்ட சிறு எறும்பாய் ஆனேன் நான்

இதயம் எந்தன் கைபிடி அளவு
எப்படிச் செய்தாய் என்னிலே களவு.
விதையும் நீரும் சேர்ந்த ஓர் பொழுது
விருட்சமாகிறாய் நாள் ஒரு பொழுது.

உதயம் அனைத்திற்கும் நீ தான் கனவு
உடனே அணைத்தீர்க்கும் உன் தினவு.
எதையுமே செய்யத் துணிந்த எனக்கு
இன்னும் பிடிபடவில்லை உன் மனக்கணக்கு.

மின்னல் கண்ணால் மீதியையும் கொள்ளையடி – உன்
எண்ணங்கள் கொண்டு என் மனதை வெள்ளையடி.
உன் கொஞ்சு தமிழ், கெஞ்சு விழி, பிஞ்சு விரல் - தனை
விஞ்சவொரு வேதாந்தம் பிரபஞ்சமதில் இல்லையடி.



 R.J.Prakalathan