Sunday, April 14, 2019

நினைவெல்லாம் நீதான் நிறைகின்றாய்.

நிலவு சுடும் என்று கண்டேன்
நிலவே நீ என்னை கடிந்துகொள்கையில்.
சூரியன் கூட சமயங்களில் குளிர்கிறது
உன் பார்வையின் பரிவுகளில் அது பதிவாகியது.
நரம்புகள் முழுதுவதும் உன் நினைவுகள் ஓடுது
நாடியும் நாளமும் உன் பெயரைத்தான்
பாடுது.
நினைவுகள் முழுவதும் நீதான் நிறைகிறாய்
இருந்தும் எடைபார்த்தேன் சற்று குறைந்திருக்கிறேன்.
நட்சத்திரங்களை  எண்ணிக்கொண்டேயிருக்கிறேன்.
ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்று குறைகிறது.
உன் கண்ணசைவில் ஒவ்வொன்றாய் தற்கொலைசெய்கிறதோ?..
உன் கொஞ்சல் மொழிகளை உலக இலக்கியமாய் மொழிபெயர்த்து போகவே
வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் வருவதாய் வராந்த பத்திரிகையில் பார்த்தேன்.
என் சிறுதவறுக்கும் நீ தினம் சிரிப்பாய்.
அந்தச்சங்கீதம் காதல்தேசத்தின் தேசிய கீதமாக்கப்பட்டுள்ளது.
பூக்களும் இப்போ புரட்சி செய்கிறது
புடவையில் உன்னை பார்த்தபோது
தமக்கும் வேண்டும் தனிச்சோலையும் சேலையும் என்று.
வண்டுகளை சொல்லிக்குற்றமில்லை ஒரு பூவின் தேனுக்கே அவை உலகம் சுற்றும்.
உயிர்பூ உனக்காக அவை உலகப்போரே இயற்றும்.
நினைவுகளின் ஒவ்வொரு படிகள்தோறும் உன் தடங்கள்
நம் காதல் புத்தகத்தின் பாடங்கள் அவை.
எல்லாம் எனக்குள்ளேயே இருந்தன.

தேடியே பார்க்கிறேன் உன் தடங்களை வெளியிலே-நீ
தெளிவானவள்
தடயமேதுமின்றி எந்தன் இருதயம் நுழைந்தவள்
வந்த வழியை விட்டு விழிவழி சென்றவள்
இரண்டுக்கும் வலி தந்து அதை இன்பமென்றல்லவா எனை ஒப்புவிக்கச்செய்கிறாய்.
-பிரகவி.

No comments:

Post a Comment