Sunday, April 14, 2019

என் கிராமத்து வாழ்க்கை

அதிகாலை சேவல் சத்தம் எங்கள் அலாரம்.
ஆதவன் மேலெழுந்தால் ஊரே கொள்ளும் அலங்காரம்.
வண்டிமாட்டுச்சத்தம் ஊரின் முதல் சங்கீதம்.
வரப்புகளின் வழியே பணிக்கு விரைந்திடுவர் மக்கள்.
வாகன இரைச்சல்,புகை, வழிநெரிசல் இல்லை
வந்ததில்லை வழிப்பறிகள்,கெடுபிடிகள் தொல்லை.
விபத்துக்கள் ஆபத்துக்கள் என்றெதுவும் நிகழ்ந்ததில்லை
வெளிநாட்டு வாழ்வில்கூட இந்தளவு மகிழ்ந்ததில்லை.
சின்னகுளத்தில் மூழ்கிக்குளித்தெழுந்து
அன்னை தயார்ப்படுத்த அவசரமாய் புறப்படுவோம்.
பசுவின் பால் போதும் பகல்வரைக்கும் பசிக்காது.
பள்ளிசென்று வந்ததுமே துள்ளி வயல் சென்றிடுவோம்.
அப்பாவிற்கான ஆகாரத்தில் அரைவாசி உண்டபின்னே
அங்கிருக்கும் வரப்புகளில் எங்கள் ஆட்டம் தொடங்கும்.
பட்டம் விடுவோம் பட்டாம்பூச்சி பிடிப்போம்
சட்டங்கள் இருந்ததில்லை ஆயினும் சரிவரவே இருந்தோம்.
திங்களின் ஒளியில் பலகதைகள் பேசி
எங்களின் இரவுணவும் நிறைவிற்கு வரும்.
தாயின் மடியில் தலைசாய்த்து அயர்வோம்.
மாய உலகில் இதுபோல் ஒரு மெய்வாழ்வில்லை.
பழிசுமக்கும் வருங்காலம் பாவம் இதை
பால் விளம்பரங்களில் மட்டுமே பார்த்தறியும்.
-பிரகவி.

No comments:

Post a Comment