Thursday, April 5, 2012

கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ?

கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ?

விழிகளில் ஒருத்தி எழுதிய விளைவால்
மொழிகளில் நானும் எழுதவே விளைந்தேன்
வலிகளில் சுகமும் வகையெனக் கலந்தாள்
வலியவே நானும் அதில் எனை இழந்தேன்
வெளிகளில் பரந்த பெருங்கடல் தான் நான் - தேன்
துளிகளில் சிலவாய் சிலையவள் வீழ்ந்தாள் - கன்ன
குழிகளில் என்னை கைதியாய் அடைத்தாள் - தன்
வழிகளை மறந்த அகதியாய் உடைத்தாள்
ஒளிகளில் உள்ள நிறங்களாய் தெரிந்தாள்
கலைகளில் உயர்ந்த ஸ்வரங்களாய் விரிந்தாள்
வளிகளில் கலந்த மலர் வாசனையானாள்
உளிகளே வியந்த சிலையாகி போனாள்
வளைவினில் முழுவதும் என்னையே புதைத்தாள் - மன
நெளிவுகள் முழுவதும் தன்னையே விதைத்தாள்
எழுதவும் பயிலவும் இயலாமல் செய்தாள்
எல்லையை அடையாத முயலாகச் செய்தாள்
கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ- இவள்
விழிகளில் விசம் தனை வைத்துள்ள வண்டோ
யாரிவள் என்று இவள் வேர்வரை தேடினேன்
தேரிவள் திறன்தனை திரும்பவும் பாடினேன்
தொலைதூர ஒளி அவள் தொடமுடியாத வளி
விலைபேச முடியதா காதலின் பெரும் சுழி
குளிர்பனிக்கால மழை அவள் அடை மழைக்கால பனி
தளிர்தோன்றி பூ ஆகும் முன்பே எனை உடைத்த தேனி
தேன் குடிக்கும் வண்டுதனை மயக்கும் பூ நீ
நான் வடிக்கும் கவியில் நானே வியக்கும் ராணி.


R.J.பிரகலாதன் 
உடுவில்

காதல் காட்டும் வேலை

காதல் காட்டும் வேலை

இருட்டில் திருட்டாய் - உயிரை
அருட்டும் காதல் - இரு
இதயம் திரட்டும் அதை
முதலில் மிரட்டும் - பின் 
இமைகள் திறக்கும் அதன் வழி
இதயம் பறக்கும் - காதல்
விழிவழி நுழையும் விதிவரை அலையும்
முடிவது புரிந்தும் முழுவதும் இனிக்கும்
இதுதான் வாழ்க்கை என அது காட்டும்
இருவரை இயக்கியே ஒருபடம் ஓட்டும்
ஒரு வரி வாழ்க்கையை ஒருயுகம் ஆக்கும்
உடன் பிறந்தோரையும் புது முகம் ஆக்கும்
உணர்ந்திட முன்பே உயிர்வரை தாக்கும் 
உணர்ந்திட முடியா பயிரிலும் பூக்கும்
விருந்ததை அருந்த முடியாமல் வருந்தும்
விரும்பியே மனமும் திரும்பவும் பொருந்தும்
திருத்தவே வழி தேடி வருந்துது மூளை
திரும்பவும் காதல் காட்டுது வேலை
முடிவது தேடியே முழு உலகமும் ஓடுது
முடிவதே இல்லை என காதலும் தான் பாடுது


R.J.பிரகலாதன் 
உடுவில்

அழகு நீ பழகு

அழகு நீ பழகு

புல்லில் பூத்த பனி நீ - தமிழ்
சொல்லில் வார்த்த கவி நீ
கல்லில் தெரிந்த சிலை நீ
துள்ளித்திரிந்த கலை நீ


வில்லைப் போலே வளைவாய்நீ - மன 
கொல்லைப் புறமாய் நுழைவாய் நீ
இல்லை போ என்றால் குழைவாய் நீ - ஒரு
வெள்ளைக் கனவாய் பொழிவாய் நீ


முல்லை மலரின் உறவா நீ
மல்லிகையவளின் மகளா நீ
புள்ளியில் தெரிகின்ற வானமா நீ
வெள்ளியில் விரிகின்ற கானமா நீ


பிள்ளைப்ப பருவ குறும்பு நீ
எல்லையில்லா இன்பக் கரும்பு நீ
தொல்லை பண்ணும் அழகு நீ
இல்லை என்னாது பழகு நீ


R.J.பிரகலாதன்
உடுவில்

ஜெனிவா பேசு துணிவாய்

ஜெனிவா பேசு துணிவாய்


இறுகிய முகங்களும் உருகிய மனங்களும்
திருகிய செவிகளும் மருகிய விழிகளும்
கருகிய முடிகளும் குறுகிய கைகளும்
உறுமிய வெடிகளால் குருதியில் கால்களும்
பொருமிய நெஞ்சமும் புழுதியில் தஞ்சமும்
இருமிய படியே இன்னும் வறுமையில் நாங்கள்
ஒருமுறை குரல் தனைக் காட்டுங்கள் நீங்கள்.


R,.J.பிரகலாதன்