Tuesday, November 13, 2012

இதயத்தின் நாதம் பற்றி இதயத்தில் இருந்து


இதயத்தின் நாதம் பற்றி இதயத்தில் இருந்து

இதயத்தின் நாதமாய் பலரின் இதயங்களில் நிலைத்து நின்ற பெருமைக்குரிய வெற்றி வானொலிக்கு இந்த நாட்கள் மிகுந்த சோதனைக்குரிய நாட்களாய் மாறியிருக்கிறது. இலங்கை வானொலி வரலாற்றில் தனியார் வானொலிகளின் ஆதிக்கம் ஆரம்பிக்க தொடங்கிய காலங்களிலேயே அத்துறைக்குள் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பிரபல அறிவிப்பாளரும், கலைஞருமான திரு A.R.Vலோஷன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் போட்டி மிக்க இந்த ஊடகத்துறையில் புதிய பாதையில் நான்கு வருடங்களிற்கும் மேற்பட்ட கடின உழைப்பின் பலனாய் வெற்றி வானொலி வளர்ந்து நின்றது. 'இது வெற்றி குடும்பத்தின் ஒட்டு மொத்த உழைப்பின் வெகுமதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று எழுதிவிட முடியாது உள்ளது. ஏனெனில் ஓட்டுமொத்த உழைப்பு என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உள்ள ஒரு குழுவின் ஒவ்வொரு தனிநபரும் காட்டும் உழைப்பின் கூட்டுத்தான் ஒட்டு மொத்த உழைப்பாகும். அந்த உழைப்பு எவ்வகையினதாயும் இருக்கலாம். ஒரு நிகழ்ச்சியின் மேம்பாடு, ஒரு நிறுவனத்தை மேம்படுத்தச் செய்யும் நடவடிக்கைகள், பணியாற்றும் ஊழியர் நல மேம்பாடு என வகைப்படும் ஒவ்வொரு உழைப்பிற்கும் அக்குழு உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு அவசியமாகும். இல்லையேல் வெற்றி எளிதில் கிடைக்காது. 
                              அண்மைக்காலங்களில் பெரிதும் வெளிச்சத்துக்கு வந்த வெற்றி வானொலியின் சில பிரச்சினைகளை இந்தப் பின்னணியிலேயே நோக்க முடியும். வெற்றி வானொலி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அது சில உரிமையாளர்களிடம் கைமாறி வந்திருக்கிறது என்ற போதும் இறுதியாக அதை உரிமையாக்கிக் கொண்டவர்களான நிறுவனத்தினர் வெற்றி வானொலி ஊழியர்களின் நலன்களில் அக்கறை காட்டத் தவறியதே பல புதிய பிரச்சினைகளுக்கு வழி கோலியது. ஊழியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை, மற்றும் கடமையாற்றிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாமை என்பன தொடர்பில் ஒரு முடிவைப் பெற்றுத் தரும்படி ஊழியர்கள் முறையிட்ட போதும் நிர்வாகத்தினர் இதனைக் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. தீர்வு தரும் வரை பணிநிறுத்தம் செய்வதாய் ஊழியர்கள் முடிவெடுத்த போதும் நான் முன்னர் குறிப்பிட்ட ஒட்டுமொத்த ஒத்துழைப்பு இங்கு கிடைக்கவில்லை.அரைவாசி எண்ணிக்கையிலான ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். மிகுதி உள்ளவர்களும் முன்னைய காலங்களில் ஒழுக்காற்று நடவடிக்கைகளினால் வெற்றியிலிருந்து விலக்கப்பட்ட சிலருமாய் சேர்ந்து வானொலியை தொடர்ந்து இயங்க வைக்கும் பணிகளில் இறங்கினர் அல்லது நிர்வாகத்தினரின் ஏவலுக்கு இணங்கினர். இதில் விடயம் என்னவென்றால் அவர்களிற்கும் அதே பிரச்சினைகள் இருந்தும் எவ்விதம் இப்படி முன்வந்தனர் என்பதே அவர்களிற்கும் உரிமையாளர்களிற்கும் இடைப்பட்ட உறவைக் காட்டி நின்றதோடு மட்டுமல்லாது ஆரம்பம் தொட்டு வெற்றிக்காய் உழைத்தவர்களை வெளித்துரத்தி இடையில் வந்தவர்களையும், இடைவிலகலில் நின்றவர்களையும் பெருமளவில் கொண்ட இந்தக்கூட்டம் உரிமையாளர்களுக்கு காட்டி நின்ற விசுவாசமும் வெளிப்படலாயிற்று. மொழியொன்றின் இருப்பிற்காய் விழியிமை மூடாது வெற்றியாய் உழைத்தவர்களைப் புறந்தள்ளி வாய்ப்பு தந்தவர்களுக்கே வாய்க்கரிசியும் போடும் ஒரு புது இனம் மனிதரில் தலை தோன்றியது கண்டு மகிழ்ந்த உரிமையும், அவர்களை வைத்தே ஆண்டுவிட ஆவல் கொண்டு அவர்களை நிர்வகிக்க போட்டி வானொலியொன்றின் பணியாளர் ஒருவரை விலை கொடுத்து வாங்கி நிற்கின்றது. 
                               புதிய மாற்றம் பிறப்பிக்கும் ஏற்றம் எனும் பெருங்கனவுடன் தொடங்குகிறது அந்தக் கூட்டத்தின் பயணம். ஆனால் தமக்கான நியாயம் கிடைக்கும் வரை முனைப்புடன் பழைய வெற்றிக் கூட்டமும் போராட்டத்தை தொடர்கிறது. உண்மை ஒழிந்திருக்கும் நெடுங்காலமல்ல. ஏனெனில் அதன் தன்மை வெளிப்படுதலே என்ற கூற்றின் படி உண்மை வெளிப்படும் ஒரு காலம். அதுவரை காத்திருக்கலாம் என்பதைத் தவிர நேயர்களுக்கு வேறு வழியிருப்பதாய் புலப்படவில்லை. 
                                    எது எப்படியாய் இருந்த போதிலும் இந்தப் பதிவின் மூலம் வலியுறுத்த வேண்டிய ஒரு சில விடயங்களை முன்நிறுத்தி நிறைவு செய்ய விளைகிறேன். அதாவது எந்த ஒரு முயற்சியின் வெற்றியும் ஒரு கூட்டு உழைப்பின் பலனாய் கிடைப்பதே என்பதை அனைவரும் புரிந்து கொள்வதோடு இவ்விதமான ஊழியர்களுக்கான நலன்கள் தொடர்பில் எடுக்கப்படும் போராட்டங்களிற்கு ஒருமித்து குரல் கொடுத்தல் மற்றும் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடல் மூலமே இவ்வகைப் போராட்டங்களை வென்றெடுக்க முடியும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு உடனடியாய் கிடைக்கக் கூடிய சலுகைகள், நலன்கள் நீண்ட காலத்திற்கு பயன்தரப் போவதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதே இப்பதிவின் முக்கிய நோக்கமாகும். 
பிரச்சினைகளின் போதான நிறைய நேயர்களால் கேட்கப்பட்ட வினாக்ககள் முன்னே கிடைக்கின்றது. அதையும் தாண்டி எதிர்காலம் பற்றிய கானாக்கள் நிறையவே இருக்கின்றது. வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் பழகிப்போன அதே பாதையில் ஆனால் புதிய வழித்தடத்தில் பயணிப்பபோம் லோஷன் குழுவோடு.
பெருங்காயம் தனைநீயும் பொடியாக்கிப் போ
வருங்காலம் தனைவெல்லும் படியாக்கிப்போ.
என்றும் நட்பில்
R.J.பிரகலாதன்
உடுவில்