Thursday, February 11, 2021

மலரும் வாழ்வும்


               மலரும் வாழ்வும்

ஒருநாள் மட்டும் உலகில் வாழும்
ஒரு பூவின் வாழ்வை பார்.
திருநாள் போலே தினமதில் முழுதாய்
சிரித்தே சிறக்கும் வாழ்வை பார்.
வெயிலோ மழையோ வேறெந்த இன்னலோ
வந்தும் வாடா முகத்தை பார்.
காம்பை விட்டுப்பிரிகையிலும் அது காட்டும் புன்னகை ஒளிதனை கண்கொண்டு பார் -அது
கற்றுத்தருவது ஒன்றே ஒன்றுதான்
கஷ்டம்,துன்பம் எதுவாகிலும் நஷ்டம் நீ அதை அனுமதித்தால் தான் வரும்.
புன்னகை கொண்டு இந்தப்புவிமேலே நின்று
ஒரு பூவினைப்போல் வாழ்வை வென்றுவிடு.
-பிரகவி.

Sunday, July 7, 2019

மீளாத்துயர் மே18

வாழ்விடம் நாங்கள் வாழவே கேட்டோம்
வாழ்விடம் எங்கள் சாவிடம் என்றானது.
#மே18.

குருதிக்குள் இருந்த எம் உறுதியை எடுத்து-பெரும்
புழுதிக்கு இரையாக்கி அறுதியாய் அறுத்தது தேசம்.
#மே18.

போர் அவலம் எமக்குமட்டும் பேரவலமானது.
ஊர் முழுக்க போர் பிடிக்க ஓடி ஓடி உடைந்துபோனோம்.
#மே18.

பயிர்செய்து அழகுபார்த்த மண்ணில் -எம்
உயிர்கொய்து அழகுபார்த்தது ஐய்யோ.
#மே18.

தேவனும் இரங்கவில்லை ஒரு தேவதையும் இறங்கவில்லை.
நாதனும் வரவில்லை எந்த நாதியும் அங்கு நமக்கில்லை.
#மே18.

தேசமும் கொண்ட தாகமும் மெல்ல கரைந்தது.
சோகமும் பல தேகமும் கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது.
#மே18.

நீதியை கேட்டு நிதம் அநாதைகள் ஆனோம்
ஆதியாம் எம் இனம் இருந்தும் அனாதிகளானோம்.
#மே18.

பிஞ்சுடல்,பெண்சதை குண்டதன் நஞ்சினை பெற்றது.
எஞ்சிய உயிர்களும் இதன்வழி பெரும்வலி பரிசாய் பெற்றது.
#மே18.

தீராத சோகம் எங்கள் முகவரியானது
ஆறாத ரணங்கள் அடைக்கலம் கேட்டது.
#மே18.

உயிர்வற்றிப்போன உடல்களை கடந்து
உதிரத்தை முழுதும் மண்ணில் விதைத்து
உறவாடி திரிந்த ஊரையும் விட்டுவிட்டு
சொந்தநாட்டிலே அகதிகளாய் ஆனோம்.
#மே18.

பிணந்திண்ணும் விலங்கைவிட இனந்திண்ணும் விலங்குகள் கோடி
உலகத்தின் கண்முன்னே எமை உருக்குலைத்தது கூடி.
#மே18.

நந்திக்கடல் முழுதும் சிந்திக்கிடந்த ரத்தம் சொல்லும்.
தந்திரம்,துரோகம்,சூழ்ச்சி இவை தந்திட்ட பாடம் சொல்லும்.
#மே18.

செந்தணல் மீதினில் கந்தகக்காற்றினில்
செந்நிறமாகின பொன்நிற மேனிகள்.
இப்புவிமீதினில் இன்னொரு மே தனில்
அப்பாவி மாந்தரெல்லாம் மீண்டிட மாட்டாரோ..
#மே18.

தீரா சோகங்கள் இதுபோல் இன்னும் திசையெங்கும் நீளும்.
தியாகங்கள் வழி எங்கள் தாயகம் திரும்பவும் மீளும்.
#மே18.
-பிரகவி.(பிரகலாதன்)

Sunday, April 14, 2019

நான்.

பாறையில் பாய்கையில் என் பெயர் அருவி.
ஓடையில் ஓடுகையில் என் பெயர்
நதி.
பள்ளத்தில் நிற்கிறேன் என் பெயர்
குளம்.
பருகவும் எனைத்தந்தால் என் பெயர்
ஜலம்.
பேரழிவை தருகையில் என் பெயர் பேரலை.
பேரழகாய் தோன்றுகையில் என் பெயர்
நீர்வீழ்ச்சி.
தூறலாகி பொழிகின்றேன் என் பெயர் மழை.
தரைவரை நுரைதருவேன் என்பெயர் அலை.
வாடையும் வரும் கோடையும் எனை வானுக்கனுப்பி மகிழ்ந்திருக்கும்-பின்
வாடும் பயிரெலாம் மழையென் வருகை கண்டு நெகிழ்ந்திருக்கும்.
காலமும் கொண்ட கோலமும் மாறுவதைப்போல்தானிருக்கும்.
ஞாலமும் அதன் ஆழமும் தன்னை
புதுப்பித்தபடியிங்கே பூத்திருக்கும்.
நானும் அதுபோல்தான்.
நாளும் ஓடுவேன் நல்லதை பாடுவேன்.
வாழும் பொழுதுகளை வரமாக தேடுவேன்.
தேடல்களில் தினம் நான் எனைத்தொலைப்பேன்
விடியல்களில் மீண்டும் எனைக்கண்டு பிடிப்பேன்.
வாடும்பொழுதுகளில் என் பிரியங்களில் திளைப்பேன்-பிறர்
வாடும் பொழுதுகளில் என் பிரியங்களை
கொடுப்பேன்.
தீரா இரவில் விரியும் கானம் போலே
தேயா நிலவொளியில் தெரியும் வானம்போலே -என்றும்
ஓயாது உழைப்பேன் ஒன்றுபட்டு நிலைப்பேன்.

-பிரகவி.

சக்தி தரும் பராசக்தி

சக்தி தரும் தேவிகளின் திருவிழா இது.
பக்தியுடன் போற்றி இங்கே பணிந்திடுவோம் வாரீர்.
இச்சா சக்தி, கிரியா சக்தி ஞானா சக்தி
இவை மூன்றும் கொண்டவள் அன்னை பராசக்தி.
எமக்காக அவளிங்கு வடிவெடுத்தாள் மூன்றாய்.
எம்வாழ்வும் வளமாகும் அவளருளில் நன்றாய்.

மகிஷனை வதம்செய்தாள் எங்கள் பெரும்தேவி.
மண்ணோடு மாண்டிட்டான் அந்த பெரும்பாவி.
அந்நாளை திருநாளாய் ஆக்கியிங்கே நாம்
ஆராதனை செய்வோம் அன்னையவள் நாமம்.

வீரமும் தைரியமும் தருபவள் துர்க்கை
செல்வமும் செழிப்பும் தருபவள் லக்ஷ்மி
கல்வியும் கலைகளும் தருபவள் சரஸ்வதி
மூவரை போற்றியே மும்மூன்று நாட்களாய்
தேவியர் புகழ்பாடும் திருநாளே நவராத்திரி.

அழியாச்செல்வமும் ஆயகலைகளும்
துணிவுடன் வீரமும் தூய கல்வியும்
பொழியச்செய்யும் எம்பெருந்தேவியர்.
இவர்களை போற்றி இறைவராய் ஏற்றி
அவனியில் நாமும் இன்புற்று வாழ்வோமே.
-பிரகவி.


லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்.

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
கொஞ்சமே என்றாலும் கொடுத்துண்.
நஞ்சினை தலைக்கும் மண்தரைக்கும் சேர்க்காதே
வெஞ்சினம் அகற்று வேறோர் உலகம் நிறுவு.
கொஞ்சமாய் பேசு கூடியிருந்து பயன்பெறு.
நெஞ்சம் நிறைந்தொரு நேசம் செய்
நீதியை கொண்டொரு தேசம் செய்
வியர்வை வரும்வரை வேலை செய்
வியாதி தீர்ந்திடும் ஒரு நாளைச்செய்.
பஞ்சம் அகற்ற பயிர்செய்
பஞ்சினும் மென்மைபோல் உயிர்செய்.
நெஞ்சம் துணிந்து நின்றிட பழகு
நீயாய் நடந்திட பாதை நிர்மாணி.
எஞ்சும் எண்ணிக்கை குறைவெனினும்
எடுத்த இலக்கை அடைந்தே ஓய்வெடு.
மிஞ்சும்படி உனக்கிங்கு எதுவுமில்லை-பலர்
விஞ்சும்படி உந்தன் வினையாற்று- விதிமாற்று.
-பிரகவி.

சின்னஞ்சிட்டுக்கள்.

மண்ணை முட்டா கால்கள் கொண்ட
விண்ணை முட்டும் கைகள் கொண்ட
கண்ணை முட்டும் கனவுகள் கொண்ட
சின்னஞ் சிறிய சிறுவர் நாங்கள்.
உடலால், உளத்தால், உணர்வால் நாங்கள்
உதை, வதை, சிதை தினம் படுகின்றோம் உலகில்  விதைகள் எமக்கிங்கு விசம் வைக்கிறார்கள்
இதை தட்டிக்கேட்க நீங்கள் எமக்கு துணை வாருங்கள். சிறுவர் தினத்தில் மட்டும் எமை சிறப்பிக்க வேண்டாம்
சிறுவர் போல் நடத்துங்கள் உருப்பெருப்பிக்க வேண்டாம்
 நமக்கான பாதைக்காய் மெல்ல நகர்ந்து வழி விடுங்கள்
நாளைக்கு பாருங்கள் நாம்தான் நாட்டின் தூண்கள்.
உலக சிறுவர் தின நல்வாழ்த்துக்கள் அனைத்து சிறுவர்களிற்கும் உரித்தாகட்டும்.
-பிரகவி.

சக்தியின் பெருவிழா.

தெள்ளுதமிழெடுத்து தேனமுது தனைக்குழைத்து
அள்ளியிறைக்கவென்றே வந்திருக்கும் அறிஞர் முன்னே -ஒரு
பிள்ளைக்கவி நானும் பிழைகளும் சிலகொண்டு
மெல்ல மேடையேறி கவிபாட இங்கே வந்துள்ளேன்-முன்னுள்ளோர்
கல்லைக்கொண்டெறிந்திடாது காத்திடுவாய் கலைவாணி.

தேவிகளின் திருநாமம் தனைப்போற்றும் திருநாளில்
துறைசார்ந்தோர் ,பெரியோர்கள்,பிள்ளைகள் உங்கள் முன்னே
பறைசாற்ற பைந்தமிழில் பாடுகின்றேன் கேளீர்.
குறையேதும் உண்டென்றால் பெருமனதால் மன்னிப்பீர்.

சக்தி தரும் தேவிகளின் திருவிழா இது
பக்தியுடன் போற்றியிங்கே வணங்கிடுவோம் வாரீர்.
இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞானாசக்தி
இவை மூன்றும் கொண்டவள் அன்னை பராசக்தி.
எமக்காக அவளிங்கு வடிவெடுத்தாள் மூன்றாய்
எம்வாழ்வும் வளமாகும் அவளருளில் நன்றாய்.

அழியாச்செல்வமதை பொழியச்செய்பவள் லக்ஷ்மி.
பொழியும் செல்வமதை மேலும் பெருகச்செய்பவளும் லக்ஷ்மி.
துளியும் குறைவையாள் எம் வழிகள் சீர்செய்வாள்.
பழியிலா செல்வம் சேர பத்மா அவள் பாதம் தொழுவோம்.

நாற்திசை உள்ளோரும் நலம்பெறவேண்டியே
தேவரும் அசுரரும் தொடங்கிய திருப்பணியில்
பாற்கடலில் இருந்தெங்கள் திருமகள் தோன்றினாள்
பாமரனும் வளம்பெறவே அவள் தேவியாய் உருமாறினாள்.

பொருள் இல்லார்க்கு இப்பூவுலகில்லை இது வள்ளுவன் வாக்கு- என்
அருள் உள்ளோர்க்கு அழியாச்செல்வமுண்டு இது அலைமகள் வாக்கு.
இல்லானை இல்லாளும் வேண்டாள் இது ஔவை அன்று சொன்னது.
இல்லானை எல்லாம் உள்ளவனாக்குவேன் இது தேவி என்றும் சொல்வது.

யுகங்களிற்கேற்ப அவள் எடுக்கும் வடிவங்கள் எட்டு- செல்வ
சுகங்களிற்கேற்ப அவளருள் கிட்டும் தொன்றுதொட்டு.
நிலையான செல்வங்கள் அவளிங்கு தருகையில் வடிவங்கள் பதினாறு.
விலையேதுமில்லா அவள் செல்வங்களால் எம் மனம் ஆறும்.

பிருகுமுனிவரின் மகளாய் உருவம்கொள்கையில் அவள் ஆதிலக்ஷ்மி.
பெருகும் பொன் பணம் தருகையிலே அவள் தனலக்ஷ்மி.
பயிர்கள் செழிக்கச்செய்கையிலே அவள் கொள்ளும் வடிவம் தானியலக்ஷ்மி.
உயிர்கொண்ட கால்நடை வளம்பெருக்க அவள் கொள்ளும் வடிவம் கஜலக்ஷ்மி.
குழந்தை செல்வம் குறைவின்றி கிடைக்க  எடுக்கும் வடிவம் சந்தான லக்ஷ்மி.
குன்றாவீரம் இக்குவளயம் கண்டிட அவள் எடுக்கும் வடிவம் வீரலக்ஷ்மி.
வாழ்வின் காரியம் யாவும் வெல்ல அவள் விஜயலக்ஷ்மி என்றாவாள்.
வாழ்வுமுழுதும் வளம்பெறும் கல்வி தந்து அவள் விஜயலக்ஷ்மியும் ஆவாள்.
எட்டுத்திருவுருவங்கள் எங்கள் அலைமகள் எடுப்பாள்.
எல்லோர்க்கும் எல்லாமும் என்றே எங்கள் திருமகள் கொடுப்பாள்.

கற்ற கல்விக்கோர் தொழிலும் கிட்டும்-அன்னை
உற்ற பொழுதுகளில் உடனிருந்து நடத்தி வைப்பாள்.
கற்கும் கல்விக்கும் பெரும் சித்தி கிட்டும் -லக்ஷ்மி
கடாட்சம் கிடைத்துவிட்டால் பெரும் முக்தி கிட்டும்.

விஷ்ணுவின் வலதுதோள் இவள் வதிவிடம் ஆகிடும்.
துஷ்டரும் நெருங்காமல் துணைசெய்வாள் திருமகளே.
தாம்பூலத்தில் இவள் வாசமிருக்கும் தாமரையிலும் இவள் வாசம் இருக்கும்
தாங்கும் அடியவர் யாவரின்மேலும் இவள் பாசமிருக்கும்.

அச்சடித்த காகிதமாம் பணம் மட்டும் செல்வமல்ல
அச்சழகும் துச்சமாகும் எம் அழகான மொழிகொண்டு
அன்பு சிறுவர் நீங்கள் அன்றாடம் பள்ளிவந்து -பெறும்
அறிவும் கலைகளுமே அழியாச்செல்வமென்று
அலைமகளே சொல்கின்றாள் அகமகிழ்வாய் ஏற்றிடுவீர்.

அன்பை தருவாள் அன்பை உங்களிடமிருந்தும் அன்னை பெறுவாள்.
அழகை தருவாள் அறிவெனும் நிலையழகை அவளிங்கு தருவாள்.
என்றும் அவள்பாதம் வணங்கிடில் எமக்கிங்கு
துன்பம் நெருங்காது துரத்தும் வியாதியும் இருக்காது.

சிறுவர் நாம் சேர்ந்து செந்தமிழில் பாட்டிசைத்து
உருவம் எட்டாய் நிற்கும் உத்தமியாம் லட்சுமியை
திருமாலின் நாயகியை ஒருநாளும் மறவாது
தினந்தோறும் தொழுதிங்கே தீபங்கள் ஏற்றுவோம் திருநாமம் போற்றுவோம்.

மங்கள லட்சுமியே போற்றி
மஹா லட்சுமியே போற்றி போற்றி
திருமகளே போற்றி - எங்கள்
தெய்வத்தாயே தினம் போற்றி போற்றி.

-பிரகவி.