Wednesday, February 8, 2012

காதல் கொள்ளை

காதல் கொள்ளை

என்னை மெல்லும் முல்லைப் பல்லும்
மெல்லக் கொல்லும் உன் பிள்ளைச் சொல்லும் - காண
வெள்ளைப் புள்ளாய் மனம் துள்ளும் பிள்ளாய்.
கொல்லை முள்ளாய் நிதம் தொல்லை தந்தாய் - ஏதும்
இல்லை என்னுள் இன்று எல்லாம் கொள்ளை.
அள்ளும் வெள்ளம் அது உந்தன் உள்ளம்
அன்பின் வெல்லம் அணைத்தெனை வெல்லும்.

உள்ளமதில் நுழைந்தாய் உன் வெள்ளமதில் மிதந்தேன்
உடனடியாய் குழைந்தாய் என் உயிர்தனையும் இழந்தேன்
வில்லதிலே புறப்பட்ட ஒரு அம்பாய் நீ – வர
கள்ளதிலே கட்டுண்ட சிறு எறும்பாய் ஆனேன் நான்

இதயம் எந்தன் கைபிடி அளவு
எப்படிச் செய்தாய் என்னிலே களவு.
விதையும் நீரும் சேர்ந்த ஓர் பொழுது
விருட்சமாகிறாய் நாள் ஒரு பொழுது.

உதயம் அனைத்திற்கும் நீ தான் கனவு
உடனே அணைத்தீர்க்கும் உன் தினவு.
எதையுமே செய்யத் துணிந்த எனக்கு
இன்னும் பிடிபடவில்லை உன் மனக்கணக்கு.

மின்னல் கண்ணால் மீதியையும் கொள்ளையடி – உன்
எண்ணங்கள் கொண்டு என் மனதை வெள்ளையடி.
உன் கொஞ்சு தமிழ், கெஞ்சு விழி, பிஞ்சு விரல் - தனை
விஞ்சவொரு வேதாந்தம் பிரபஞ்சமதில் இல்லையடி.



 R.J.Prakalathan

No comments:

Post a Comment