Thursday, April 5, 2012

கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ?

கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ?

விழிகளில் ஒருத்தி எழுதிய விளைவால்
மொழிகளில் நானும் எழுதவே விளைந்தேன்
வலிகளில் சுகமும் வகையெனக் கலந்தாள்
வலியவே நானும் அதில் எனை இழந்தேன்
வெளிகளில் பரந்த பெருங்கடல் தான் நான் - தேன்
துளிகளில் சிலவாய் சிலையவள் வீழ்ந்தாள் - கன்ன
குழிகளில் என்னை கைதியாய் அடைத்தாள் - தன்
வழிகளை மறந்த அகதியாய் உடைத்தாள்
ஒளிகளில் உள்ள நிறங்களாய் தெரிந்தாள்
கலைகளில் உயர்ந்த ஸ்வரங்களாய் விரிந்தாள்
வளிகளில் கலந்த மலர் வாசனையானாள்
உளிகளே வியந்த சிலையாகி போனாள்
வளைவினில் முழுவதும் என்னையே புதைத்தாள் - மன
நெளிவுகள் முழுவதும் தன்னையே விதைத்தாள்
எழுதவும் பயிலவும் இயலாமல் செய்தாள்
எல்லையை அடையாத முயலாகச் செய்தாள்
கிளிகளில் இத்தனை கொலை வகை உண்டோ- இவள்
விழிகளில் விசம் தனை வைத்துள்ள வண்டோ
யாரிவள் என்று இவள் வேர்வரை தேடினேன்
தேரிவள் திறன்தனை திரும்பவும் பாடினேன்
தொலைதூர ஒளி அவள் தொடமுடியாத வளி
விலைபேச முடியதா காதலின் பெரும் சுழி
குளிர்பனிக்கால மழை அவள் அடை மழைக்கால பனி
தளிர்தோன்றி பூ ஆகும் முன்பே எனை உடைத்த தேனி
தேன் குடிக்கும் வண்டுதனை மயக்கும் பூ நீ
நான் வடிக்கும் கவியில் நானே வியக்கும் ராணி.


R.J.பிரகலாதன் 
உடுவில்

No comments:

Post a Comment